உள்ளடக்கத்துக்குச் செல்

தலைமறைவாக இருந்த சுவாமி நித்தியானந்தர் இமாச்சலப் பிரதேசத்தில் கைது

விக்கிசெய்தி இலிருந்து

வியாழன், ஏப்பிரல் 22, 2010

பாலியல் சர்ச்சையில் சிக்கி தலைமறைவாக இருந்துவந்த சுவாமி நித்தியானந்தர் இமாச்சல பிரதேசத்தில் உள்ள கோகலம் மாவட்டம் கர்கி எனும் ஊரில் நேற்று புதன்கிழமை கைது செய்யப்பட்டார் என கர்நாடக காவல்துறை அறிவித்துள்ளது. கைது செய்யப்படும் போது அவரிடம் மூன்று இலட்ச ரூபாயும், இரண்டாயிரம் டாலர் பயணக் காசோலையும் இருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.


நடிகை ரஞ்சிதாவுடன் உல்லாசமாக இருந்ததாக மார்ச் மாதம் சன் தொலைக்காட்சியில் காணொளி ஒன்று வெளியானது. அதனைத்தொடர்ந்து தலைமறைவாக இருந்துவந்த அவர் தனது சீடர்கள் மூலம் பேட்டியளித்து வந்தார். அப்போது தான் சட்டத்துக்கு புறம்பாக நடக்கவில்லை என்று தெரிவித்திருந்தார்.


அவர் மீது மத உணர்வை புண்படுத்தியது, ஆட்கடத்தல், மோசடி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் தமிழகத்திலும் கர்நாடகத்திலும் பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. தமிழகத்தில் பதிவான வழக்குகள் அனைத்தும் பெங்களூர் போலீசாருக்கு மாற்றப்பட்டுவிட்டன.


இதற்கிடையே செல்வமணி என்பவர் ஸ்ரீபெரும்புதூர் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதிமன்றத்தில் இந்துமத உணர்வுகளை புண்படுத்தும் விதத்தில் காவி உடையணிந்து சல்லாபத்தில் ஈடுபட்ட நித்யானந்தர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிய மனுவிற்கு கடந்த 19ம் தேதி பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் வருகிற மே 20ல் அங்குள்ள நீதிமன்றத்தில் விசாரணைக்காக நிறுத்தப்படுவார் எனத் தெரிவிக்கப்படுகிறது.


முன்னதாக, நடிகை ரஞ்சிதாவுடன் உல்லாசமாக இருப்பது போன்ற காணொளியை மார்ச் 2, 2010 அன்று சன் தொலைக்காட்சி ஒளிபரப்பியது. இதனைத்தொடர்ந்து நக்கீரன் பத்திரிக்கையும் தனது இணையதளத்தில் முழுநீள காணொளியாக பதிப்பித்தது. குடும்பத்துடன் பார்க்கக் கூடிய முக்கிய நேரத்தில் இத்தகையக் காட்சியை ஒளிபரப்பியது பொதுமக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. நக்கீரன் பத்திரிக்கையில் முழு காணொளியை பார்க்க சந்தாதாரராக பணம் செலுத்த சொன்னதும் ஆபாச வலைப்பதிவுகள் போன்ற செய்கை என்று கண்டனங்களுக்கு உள்ளாகியது. இதனைத்தொடர்ந்து முதலமைச்சர் கருணாநிதி ஊடகங்களுக்கு கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டிருந்தார்

மூலம்[தொகு]