தாய்லாந்தில் இராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியது

விக்கிசெய்தி இலிருந்து

வியாழன், மே 22, 2014

தாய்லாந்தில் வலிய ஆட்சி மாற்றம் ஒன்று இடம்பெற்றுள்ளதாகவும், அரசை இராணுவம் தம் பொறுப்பில் எடுத்துள்ளதாகவும் அந்நாட்டின் இராணுவத் தளபதி அறிவித்துள்ளார்.


நாட்டில் சட்டமும் ஒழுங்கும் நிலைநாட்டப்படும் என்றும், அரசியல் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் என்றும் தொலைக்காட்சி உரை ஒன்றில் இராணுவத் தளபதி கூறினார்.


கடந்த செவ்வாய் அன்று இரு நாட்களுக்கு முன்னர் தாய்லாந்தில் இராணுவச் சட்டம் கொண்டுவரப்பட்டது. கடந்த இரு நாட்களாக முக்கிய அரசியல்கட்சிகளுக்கிடையே இடம்பெற்றுவந்த பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிவடைந்தன. பேச்சுக்கள் நடைபெற்ற இடத்தை சுற்றி வளைத்த இராணுவத்தினர், தலைவர்களை அங்கிருந்து வெளியேற்றி அவ்விடத்தை மூடி விட்டனர்.


கடந்த பல மாதங்களாக அரசுக்கும் எதிர்க்கட்சி ஆதரவாளர்களுக்கும் இடையே கொந்தளிப்பு நிலை இருந்து வந்தது. 1932 ஆம் ஆண்டு முதல் தாய்லாந்தில் குறைந்தது 12 தடவைகள் இராணுவப் புரட்சிகள் நடத்தப்பட்டுள்ளன.


மூலம்[தொகு]