உள்ளடக்கத்துக்குச் செல்

பிரியா விகார் கோவில் பகுதி கம்போடியாவுக்கே சொந்தம், ஐநா நீதிமன்றம் தீர்ப்பு

Checked
விக்கிசெய்தி இலிருந்து

செவ்வாய், நவம்பர் 12, 2013

தாய்லாந்து எல்லையில் உள்ள பிரியா விகார் கோயிலைச் சுற்றியுள்ள பெரும்பாலான பகுதிகள் கம்போடியாவுக்குச் சொந்தமானது என ஐக்கிய நாடுகளின் உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.


பிரியா விகார் கோயிலின் அமைவிடம்
பிரியா விகார் கோயில்

பிரியா விகார் கோயில் அகுதியில் நிலைகொண்டுள்ள தாய்லாந்துப் படையினர் உடனடியாக அங்கிருந்து விலக வேண்டும் என நெதர்லாந்தின் ஹேக் நகரில் உள்ள பன்னாட்டு நீதிமன்றம் தாய்லாந்தைக் கேட்டுள்ளது.


சர்ச்சைக்குரிய பகுதிகள் அனைத்தும் கம்போடியாவுக்குச் சொந்தமானது என நீதிமன்றம் அறிவிக்கவில்லை. அருகில் உள்ள மலைப்பகுதிக்கு கம்போடியா உரிமை கோர முடியாது என அது கூறியுள்ளது.


பன்னாட்டு நீதிமன்றத்தின் தீர்ப்பை இரு நாட்டு அரசுகளும் வரவேற்றுள்ளன. நீதிமன்றத்தின் தீர்ப்பை மக்கள் ஏற்க வேன்டும் என தாய்லாந்துப் பிரதமர் யிங்க்லக் சினவாத்ரா கேட்டுக் கொண்டுள்ளார்.


கம்போடியப் பிரதமர் ஊன் சென் இது குறித்துக் கருத்துத் தெரிவிக்கையில், எல்லைப் பிரச்சினை குறித்து தாம் தாய்லாந்து அரசுடன் அமைதியான முறையில் பேச்சுக்களை நடத்துவோம் எனக் கூறினார்.


பிரியா விகார் கோயில் கிபி 11-12ம் நூற்றாண்டுகளில் முதலாம் மற்றும் இரண்டாம் சூரியவர்மன் காலத்தில் கட்டப்பட்ட சிவன் கோயில் ஆகும். 1962 இல் தாய்லாந்துக்கும் கம்போடியாவுக்கும் இடையில் இக்கோயிலின் உரிமை தொடர்பாக பெரும் சர்ச்சை ஏற்பட்டு பன்னாட்டு நீதிமன்றத்தில் முறையிடப்பட்டு கம்போடியாவுக்கு இக்கோயிலின் உரிமை வழங்கப்பட்டது. இக்கோயிலை அடுத்துள்ள நிலம் யாருக்குச் சொந்தம் என்பது குறித்து எதுவும் கூறப்பட்டிருக்கவில்லை. கெமர் பேரரசினால் கட்டப்பட்ட கோயில்களில் பிரியா விகார் மிகவும் புகழ் வாய்ந்ததும் கண்ணுக்குக் குளிர்ச்சியான அமைப்பையும் கொண்டுள்ளது.


2008 ஆம் ஆண்டில் இக்கோயில் யுனெஸ்கோவினால் உலக பாரம்பரியக் களமாக அறிவிக்கப்பட்டதை அடுத்து, இந்தப் பிரதேசத்தின் உரிமை குறித்து இரண்டு நாடுகளுக்கும் இடையே இருந்துவந்த சர்ச்சை மீள உருவெடுத்தது. இதையடுத்து இரு நாடுகளும் தமது எல்லைப்புறத்த்தில் பெருமளவு துருப்புக்களைக் குவித்து வைத்துள்ளது. கோயில் தொடர்பான தாய்லாந்துடனான எல்லைப்போரை முடிவுக்குக் கொண்டுவர ஐக்கிய நாடுகளின் தலையீட்டை கம்போடியப் பிரதமர் உன் சென் 2011 ஆம் ஆண்டில் நாடியிருந்தார்.


தீர்ப்பு கம்போடியாவுக்குச் சாதகமாக வழங்கப்பட்டிருப்பதனால், எல்லைக் கிராமங்களில் தேசியவாதிகளினால் வன்முறைகள் கிளப்பப்படலாம் ஐயம் கிளப்பப்பட்டுள்ளது.


பன்னாட்டு நீதிமன்றத்தினால் தற்போது வழங்கப்பட்டுள்ள 1962 ஆம் ஆண்டில் வழங்கப்பட்ட தீர்ப்பின் விளக்கம் என்பதால் இதனை எதிர்த்து மேன்முறையீடு செய்ய முடியாது.


மூலம்

[தொகு]