உள்ளடக்கத்துக்குச் செல்

திபெத்து நாடு கடந்த அரசின் தலைவராக லோப்சங் சங்கை தெரிவு

Checked
விக்கிசெய்தி இலிருந்து

புதன், ஏப்பிரல் 27, 2011

திபெத்தின் நாடு கடந்த அரசின் புதிய பிரதமராக ஹார்வர்ட் பல்கலைக்கழகக் கல்விமான் லோப்சங் சங்கை தெரிவு செய்யப்பட்டார். திபெத்தின் ஆன்மிகத் தலைவர் தலாய் லாமா நாடு கடந்த திபெத்து அரசின் அரசியல் தலைமையில் இருந்து ஒதுங்குவதற்கு முடிவு செய்ததை அடுத்து லோப்சங் சங்கை அப்பதவிக்குத் தெரிவானார்.


உலகெங்கும் உள்ள திபெத்தியர்களுக்கிடையில் இடம்பெற்ற வாக்கெடுப்பில் லோப்சங் சங்கை 55% வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இப்பதவிக்குப் போட்டியிட்ட டென்சிங் டெத்தோங், டாஷி வாங்டி ஆகியோர் தோல்வியடைந்தனர். ஐக்கிய அமெரிக்காவில் தலாய் லாமாவின் பிரதிநிதியாக இருந்த டென்சிங் டெத்தோங் 37.4% வாக்குகளும், டஷி வாங்டி 6.4% வாக்குகளும் பெற்றனர்.


தலாய் லாமா திபெத்தின் ஆன்மிகத் தலைவராக தொடர்ந்து பதவியில் இருப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மார்ச் மாதத்தில் தேர்தல்கள் இடம்பெற்றன. முடிவுகள் திபெத்தின் நாடு கடந்த அரசு செயல்படும் இந்திய நகரமான தரம்சாலாவில் அறிவிக்கப்பட்டன.


புதிய பிரதமராகத் தெரிவு செய்யப்பட்ட லோப்சங் சங்கை 42 வயதானவர். இந்தியாவில் பிறந்த இவர் திபெத்துக்கு என்றும் சென்றதில்லை. இவரது தந்தை 1959 ஆம் ஆண்டில் தலாய் லாமாவுடன் சேர்ந்து திபெத்தை விட்டு வெளியேறினார்.


தான் தரம்சாலாவுக்குச் சென்று வாழவிருப்பதாகக் கூறிய லோப்சங் சீனா குறித்து தலாய் லாமாவின் கொள்கைகளை ஆதரிப்பதாகத் தெரிவித்தார்.


"திபெத்தியர்களுக்கு சுயாட்சி உரிமை வழங்கப்பட்டால், சீனாவின் ஒரு பகுதியாக திபெத்து இருப்பதை நாம் ஆதரிக்கிறோம்," என அவர் கூறினார்.


சீனா திபெத்தை தனது ஆட்சிப் பகுதி என அறிவித்திருந்தாலும், பெரும்பாலான திபெத்தியர்கள் பல நூற்றாண்டுகளாக இமாலயப் பகுதி தனி நாடாகவே இருந்து வந்துள்ளது எனவும் 1950களில் சீனா அதனை ஆக்கிரமித்தது எனவும் கூறி வருகின்றனர்.


தொடர்புள்ள செய்திகள்

[தொகு]

மூலம்

[தொகு]