உள்ளடக்கத்துக்குச் செல்

திருத்தந்தையின் வருகையை அடுத்து கியூபாவில் புனித வெள்ளி விடுதலை நாளாக அறிவிப்பு

விக்கிசெய்தி இலிருந்து

ஞாயிறு, ஏப்பிரல் 1, 2012

திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட் கேட்டுக் கொண்டமைக்கு அமைய புனித வெள்ளி நாளை பொது விடுமுறை நாளாக கியூபாவின் கம்யூனிச அரசு அறிவித்துள்ளது.


சிலுவையில் இயேசு கிறித்து

அண்மையில் கியூபாவிற்கு அதிகாரபூர்வப் பயணம் மேற்கொண்டிருந்த திருந்த்தந்தை கியூப அரசிடம் இந்த வேண்டுகோளை விடுத்திருந்தார். கத்தோலிக்கர் புனித வெள்ளியை இயேசு கிறித்துவின் இறந்த நாளாகக் கொண்டாடுவர். அத்துடன் இந்நாளை அவர்கள் உயிர்த்த ஞாயிறு நிகழ்வின் ஒரு பகுதியாகக் கொண்டாடுவர்.


கியூபாவில் 1960களில் மத ரீதியான விடுமுறைகள் அனைத்தும் கம்யூனிச அரசால் ரத்துச் செய்யப்பட்ட பின்னர் முதற்தடவையாக பெரிய வெள்ளியை விடுமுறை நாளாக அந்நாடு அறிவித்துள்ளது.


இவ்வாண்டு மட்டுமே பெரிய வெள்ளி விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனாலும், அடுத்து வரும் ஆண்டுகளில் இதனை நிரந்தரமாக விடுமுறை நாளாக அறிவிப்பதா என்று பின்னர் முடிவு செய்யப்படும் என அரசு அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.


கியூபாவுக்கான 3 நாள் பயணத்தின் போது கடந்த செவ்வாய்க்கிழமை அன்று திருத்தந்தை கியூபாவின் அரசுத்தலைவர் ராவுல் காஸ்ட்ரோவைச் சந்தித்து கியூப மக்களின் மனித உரிமைகள் பற்றி விவாதித்தார். மக்களின் அடிப்படை உரிமைகளை எவரும் மறுக்க முடியாது என அவர் காஸ்ட்ரோவிடம் எடுத்துக் கூறினார். அத்துடன் கியூபா மீது அமெரிக்கா கடந்த 50 ஆண்டுகளாக பொருளாதாரத் தடையை அமுல் படுத்தியுள்ளது பற்றியும் அவர் அமெரிக்கா மீது கண்டனத்தைத் தெரிவித்தார்.


கியூபா 1990கள் வரை இறைமறுப்பு நாடாக இருந்து வந்தது. தற்போது 10 விழுக்காட்டிற்கும் குறைவானோரே கத்தோலிக்க மதத்தைப் பின்பற்றுகின்றனர். 1998 ஆம் ஆண்டில் திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பர் கியூபாவிற்கு சென்றிருந்த போது விடுத்த வேண்டுகோளை அடுத்து கம்யூனிசத் தலைவர் பிடெல் காஸ்ட்ரோ கிறித்துமசு நாளை விடுமுறை நாளாக அறிவித்திருந்தார்.


மூலம்[தொகு]