உள்ளடக்கத்துக்குச் செல்

தில்லியில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சியமைக்கிறது

Checked
விக்கிசெய்தி இலிருந்து
படிமம்:ArvindKejriwal2.jpg
அரவிந்த் கேச்ரிவால்

திங்கள், திசம்பர் 23, 2013

இந்தியாவில் ஊழலுக்கு எதிராக ஆரம்பிக்கப்பட்ட ஆம் ஆத்மி கட்சி தலைநகர் தில்லியில் ஆட்சி அமைக்கவிருப்பதாக அக்கட்சி அறிவித்துள்ளது.


ஆம் ஆத்மி கட்சியின் (பொது மனிதனின் கட்சி) தலைவரும், முன்னாள் அரசு அதிகாரியுமான அரவிந்த் கேச்ரிவால் புதிய முதல்வராகப் பொறுப்பேற்பார் என அக்கட்சி அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.


இரு வாரங்களுக்கு முன்னர் இடம்பெற்ற சட்டமன்றத் தேர்தலில் மொத்தமுள்ள 70 இடங்களில் 28 இடங்களை ஆம் ஆத்மி கைப்பற்றியது. ஆளும் காங்கிரஸ் கட்சி 8 இடங்களை மட்டும் கைப்பற்றி படுதோல்வியடைந்தது. பாரதீய ஜனதா கட்சி 32 இடங்களைக் கைப்பற்றி முதலிடத்தைப் பிடித்தது. காங்கிரசுக் கட்சி ஆம் ஆத்மி கட்சிக்கு ஆதரவளிக்க முன்வந்ததை அடுத்து அக்கட்சி ஆட்சி அமைக்கவிருக்கிறது. புதிய அரசு பதவியேற்கும் நாள் பின்னர் அறிவிக்கப்படவிருக்கிறது. அநேகமாக வியாழக்கிழமை புதிய அரசு அமைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


தேர்தலின் பின்னர் வேறு எந்த கட்சியிடமிருந்தும் ஆதரவு கோரப் போவதில்லை என்று அக்கட்சி அறிவித்திருந்தது. ஆனால், பொதுமக்கள் மத்தியில் பல்வேறு வகைகளில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்புகளை அடுத்து, அக்கட்சி ஆட்சியமைப்பதையே பெரும்பாலானோர் விரும்புவதாகத் தெரிவிக்கப்பட்டது.


இக்கட்சியின் முடிவை தில்லியின் முன்னாள் முதல்வர் சீலா தீக்சித் வரவேற்றிருக்கிறார். "ஆம் ஆத்மி கட்சி மக்களுக்கு அளித்த உறுதிமொழிகளை நிறைவேற்றும்," எனத் தான் நம்புவதாக அவர் தெரிவித்துள்ளார்.


பிஜேபி தலைவர் ஹர்சு வர்தன், காங்கிரசுடன் கூட்டுச் சேர்வது என்று ஆம் ஆத்மி கட்சி எடுத்த முடிவை சாடியுள்ளார். மக்கள் தீர்ப்புக்கு அவர்கள் துரோகமிழைத்து விட்டதாக அவர் கூறியுள்ளார்.


ஊழலுக்கெதிராக அரவிந்த் கேச்ரிவால், அன்னா அசாரே போன்றார் நடத்திய இயக்கத்தின் விளைவாக ஆம் ஆத்மி கட்சி உருவாக்கப்பட்டது.


மூலம்

[தொகு]