தில்லியில் 19வது பொதுநலவாயப் போட்டிகள் கோலாகலமாக ஆரம்பம்

விக்கிசெய்தி இல் இருந்து
Jump to navigation Jump to search

திங்கள், அக்டோபர் 4, 2010

19-வது பொதுநலவாயப் போட்டிகள் நேற்று ஞாயிறு மாலை தில்லி சவகர்லால் நேரு விளையாட்டரங்கத்தில் கோலாகலமாகத் துவங்கியிருக்கின்றன. 71 நாடுகளில் இருந்து


ஆரம்ப விழா இடம்பெற்ற சவகர்லால் நேரு விளையாட்டரங்கம்

ஆரம்பத்தில் போட்டிகளில் 71 நாட்டு வீரர்களின் அணிவகுப்பு நடைபெற்றது. முதலில், 2006 ஆம் ஆண்டின் போட்டிகளை நடத்திய ஆத்திரேலிய அணி வீரர்கள் அணிவகுத்து வந்தார்கள். போட்டியை நடத்தும் நாடு என்ற முறையில், இந்திய அணி கடைசியாக வந்தது. இந்தியாவின் சார்பில் 619 பேர் கொண்ட பிரமாண்ட அணி பங்கேற்கிறது. இந்தியாவின் சார்பில் ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்றவரான துப்பாக்கி சுடும் வீரர் அபினவ் பிந்திரா தேசியக் கொடி ஏந்தி வந்தார்.


இங்கிலாந்தின் எலிசபெத் மகாராணியின் சார்பில் இளவரசர் சார்ல்சும், இந்தியக் குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீலும் கூட்டாக போட்டிகளைத் துவக்கி வைத்தார்கள். தொடக்க விழாவில் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர்.


துவக்கத்தில், இந்திய பாரம்பரிய இசைக் கருவிகளைப் பறைசாற்றும் வகையில், பல்வேறு மாநிலங்களின் கலைஞர்கள் இசை முழக்கங்களை எழுப்பினார்கள். கண்கவர் வாண வேடிக்கைக்குப் பிறகு வண்ண விளக்குகளுடன் உலகின் மிகப்பெரிய ஹீலியம் பலூன் பறந்தது. அதில், பல்வேறு விளையாட்டுகளைக் குறிக்கும் வகையிலான உருவங்கள் அமைக்கப்பட்டிருந்தன. நிகழ்ச்சியில், 7 வயது சிறுவன் கேசவ் மிகச்சிறப்பாக தபேலா வாசித்து அனைவரையும் கவர்ந்தான்.


இந்தப் போட்டிக்கான ஏற்பாடுகள் நடைபெற்ற நேரத்தில், ஊழல் முறைகேடுகள், அரங்கங்கள் மற்றும் வீரர்களின் குடியிருப்புக்களைத் தயார் செய்வதில் தாமதம், சுகாதாரக் குறைபாடுகள் என இந்திய மற்றும் சர்வதேச ஊடகங்களில் வெளியான எதிர்மறையான செய்திகள், இந்தப் போட்டிகள் தொடர்பாக பல சந்தேகங்களை ஏற்படுத்தின. ஆனாலும், வண்ணமயமாக sumaar 9,000 நிகழ்ச்சியாளர்கள் கலந்துகொண்ட ஆரம்ப விழா சுமூகமாக நடந்து முடிந்தது.


இப்போட்டிகளுக்காக இந்தியா இதுவரை 6 பில்லியன் அமெரிக்க டாலர்களைச் செலவழித்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இது ஆரம்பத்தில் எதிர்பார்க்கப்பட்ட செலவுகளை விட 60 மடங்கு அதிகமானதாகும்.


இசைப்புயல் ஏ. ஆர். ரகுமானின் பொதுநலவாயக் கருப்பொருளுடன் கூடிய பாடலுடன் நிகழ்ச்சி முடிவடைந்தது.


மொத்தம் உள்ள 17 போட்டிகளிலும் இந்தியா பங்கேற்கிறது. கடந்த மெல்போர்ன் காமன்வெல்த் போட்டியில் இந்தியா பதக்கப் பட்டியலில் 4வது இடத்தைப் பிடித்தது. இந்த முறை மேலும் முன்னேற்றம் அடையும் என்ற பெரும் நம்பிக்கை உள்ளது.


மூலம்