தில்லி ராம்லீலா மைதானத்தில் அண்ணா அசாரே உண்ணாநிலைப் போராட்டத்தை ஆரம்பித்தார்

விக்கிசெய்தி இலிருந்து

வெள்ளி, ஆகத்து 19, 2011

ஊழலை ஒழிக்கும் முயற்சி வெற்றியடைய, வலுவான லோக்பால் மசோதா கொண்டுவரக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அண்ணா அசாரே, இன்று முதல் டெல்லி ராம்லீலா மைதானத்தில் தனது உண்ணாநிலைப் போராட்டத்தை ஆரம்பிக்க உள்ளார். 15 நாட்கள் உண்ணாவிரதம் இருப்பதற்கு அவருக்குக் காவல்துறை அனுமதி வழங்கியுள்ளது.


படிமம்:Anna Hazare.jpg
அன்னா அசாரே

கடந்த 16-ம் தேதி செவ்வாய்க்கிழமை காலை, தனது வீட்டில் இருந்து காவல் துறையினரால் அழைத்துச் செல்லப்பட்ட அசாரே (அகவை 74), பின்னர் கைது செய்யப்பட்டு டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டார். ஆனால், அன்றிரவே அவரை விடுதலை செய்வதாக சிறை அதிகாரிகள் அறிவித்தாலும், வெளியே செல்ல மறுத்தார் அசரே. உண்ணாவிரதப் போராட்டம் நடத்த தனக்கு நிபந்தனையற்ற அனுமதி கிடைக்கும் வரை சிறையை விட்டுச் செல்ல முடியாது எனப் பிடிவாதமாக இருந்தார். இதையடுத்து, டெல்லி காவல் துறையினருக்கு இடையே தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்று சமரசத்தை அடுத்தே உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடர அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அவர் இன்று வெள்ளிக்கிழமை காலையில் சிறையிலிருந்து உண்ணாவிரதம் நடைபெற இருக்கும் ராம் லீலா மைதானத்துக்குச் செல்ல இருப்பதாகவும் அங்கு செப்டம்பர் 2 வரை உண்ணாவிரதம் இருக்க ஒப்புக் கொண்டார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.


சிறையில் இருந்து வெளியே வந்தவுடன் கூடியிருந்த பல்லாயிரக்கணக்கான ஆதரவாளர்கள் மத்தியில் உரையாற்றிய அசாரே, "1947 ஆம் ஆண்டில் பிரித்தானியரிடம் இருந்து விடுதலை பெற்றோம். ஆனால் விடுதலை அடைந்து 64 ஆண்டுகள் ஆகியும், முழுமையான விடுதலையை நாம் இன்னும் அடையவில்லை," எனத் தெரிவித்தார்.


இதற்கிடையே, இந்தப் பிரச்சினை தொடர்பாக நாடாளுமன்றத்தில் அரசுக்கும் எதிர்க்கட்சிகளுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. அந்தப் பிரச்சினை தொடர்பாக அறிக்கை ஒன்றை தாக்கல் செய்த பிரமதர் மன்மோகன் சிங், சட்டம் இயற்றும் அதிகாரம் நாடாளுமன்றத்துக்குத்தான் உள்ளதே தவிர, அண்ணா அசாரே தனது மசோதாவை திணிக்க முடியாது என்று குறிப்பிட்டார்.


இந்தியாவின் ஊழல் தடுப்பு ஆணையத்தின் முன்னாள் தலைவரான என். விட்டல் பிபிசி செய்தியாளரிடம் கருத்துத் தெரிவிக்கையில், அண்ணா அசாரே போன்றவர்கள், அரசு எந்தவிதம் செயல்படுகிறது என்பதை உணராததால் அவர்கள் சொல்கிற ஜனலோக்பால் சட்டம் போன்ற ஏற்பாடுகள் நடைமுறைக்கு ஒத்துவராது எனவும் நடைமுறையில் செயல்படுத்தமுடியாத ஒன்றை முன்வைத்து, அதைத்தான் செயல்முறை படுத்தவேண்டும் என்று சொன்னால் அது கடைசியில் ஏட்டுச் சுரைக்காய் போலத்தான் இருக்கும் எனவும் கூறினார்.


தொடர்புள்ள செய்திகள்[தொகு]

மூலம்[தொகு]