துடுப்பாட்டச் சூதாட்டத்தில் இலங்கை வீரர்கள் - முன்னாள் வீரர் திலகரத்ன குற்றச்சாட்டு

விக்கிசெய்தி இலிருந்து

சனி, ஏப்பிரல் 30, 2011

துடுப்பாட்ட சூதாட்டத்தில் இலங்கைத் துடுப்பாட்ட அணியினருக்கு தொடர்பு இருக்கிறது என்று இலங்கை அணியின் முன்னாள் தலைவர் அஷான் திலகரத்ன கூறியுள்ளார்.


இது குறித்து முன்னணி தொலைக்காட்சியொன்றுக்கு வழங்கிய செவ்வியொன்றில் போட்டிக்கு முன்னரே முடிவை நிர்ணயிக்கும் மேட்ச் ஃபிக்சிங் முறைகேடுகள் இலங்கைத் துடுப்பாட்ட அணியில் 1992ம் ஆண்டு முதலே நடந்துவருவதாகவும், இதனை பொறுப்புணர்வுடன் தன் கூறுவதாகவும், பல சந்தர்ப்பங்களில் இந்த சூதாட்ட விவகாரம் வெளியில் வந்து விடும் என்ற அச்சம் இருந்ததாகவும், ஆனால் இது பலருக்கு பணம் கொடுத்து அமுக்கப்பட்டதாகவும் திலகரத்னே கூறியுள்ளார்.


43 வயதான திலகரத்னே 2003 ஏப்ரல் முதல் 2004 மார்ச் வரை இலங்கை துடுப்பாட்ட அணியின் முன்னாள் தலைவராக இருந்தார். 83 தேர்வு மற்றும் 200 ஒருநாள் துடுப்பாட்டப் போட்டிகளில் இவர் விளையாடி உள்ளார். 1996 ஆம் ஆண்டு அர்ஜுன ரணதுங்க தலைமையில் உலகக் கோப்பையை வென்ற அணியிலும் அவர் இடம்பெற்றிருந்தார்.


"இந்தியா - இலங்கை அணிகள் மோதிய உலக துடுப்பாட்ட கோப்பை இறுதிப் போட்டி முடிவில் சூதாட்டம் இருப்பதாக நான் சொல்லவில்லை. ஆனால் இலங்கையில் சூதாட்டம் பல ஆண்டுகளாக நடந்து வருகிறது. அது இன்று புற்றுநோய் போல் வீரர்களிடம் பரவி உள்ளது. உலக கோப்பை இறுதிப் போட்டியில் இலங்கை அணியில் 4 வீரர்கள் மாற்றப்பட்டது ஏன்? என்பதை நாம் எல்லோரும் கேட்க வேண்டும். மென்டிஸ் நீக்கப்பட்டு வேறு சுழற்பந்து வீச்சாளரை சேர்த்தது ஏன்? சமரசில்வாவுக்கு பதிலாக ரன்களே எடுக்காத கபுகேதரா சேர்க்கப்பட்டது நியாயமான முடிவு அல்ல. இந்த நாட்டில் உங்களுக்கு தெரியாத ஒரு பக்கம் எனக்கு தெரியும். அது குறித்து நாங்கள் விவாதித்து உள்ளோம். ஐ.பி.எல். ஏலத்திற்கு முன்பு இலங்கை அணி தேர்வு செய்யப்பட்டது ஏன் என்பது குறித்து விசாரிக்க வேண்டும். சூதாட்டத்தில் ஈடுபட்டுள்ள அனைத்து இலங்கை வீரர்களையும் எனக்கு தெரியும். இது ஒரு வலைப்பின்னல் போல் தொடர்ந்து நடக்கிறது. சூதாட்டத்தை பொறுப்புணர்வுடன் வெளிப்படுத்தும் நான் இதில் ஈடுபட்டவர்களின் பெயர்களை விரைவில் வெளியிடுவேன். சூதாட்ட விவகாரங்கள் கிளம்பும் போதெல்லாம் அதன் உண்மை மூடி மறைக்கப்பட்டு விடுகிறது. இந்த விவகாரத்தில் யாராவது தலையிட்டு இதனை தடுத்து நிறுத்த வேண்டும். இல்லையெனில் இன்னும் இரண்டு மூன்று ஆண்டுகளில் இந்த அரசியல் நிலவரத்திலும், ஊழல் நிர்வாகிகள் மத்தியிலும் இந்த விஷயத்தில் இலங்கை, பாகிஸ்தானையும் விஞ்சிவிடும். பொறுப்பில் உள்ளவர்கள் விரைவில் இதனை தடுக்க வேண்டும். இல்லையேல் பாகிஸ்தானுக்கு ஏற்பட்ட நிலைமைதான் இலங்கை அணிக்கு ஏற்படும்," என்று அவர் தெரிவித்துள்ளார்.


திலகரத்தினவின் இக்குற்றச்சாட்டுகள் தொடர்பாக தாம் ஒரு சிறப்புக் கூட்டம் ஒன்றுக்கு ஏற்பாடு செய்துள்ளதாக இலங்கைத் துடுப்பாட்ட வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


திலகரத்தின வழங்கிய நேர்காணல் குறித்த செய்தி நேற்றைய டெய்லி மிரர் பத்திரிகையில் வெளியிடப்பட்டுள்ளது. அப்பத்திரிகையின் விளையாட்டுப் பகுதியின் ஆசிரியர் சன்னக்க டி சில்வா இது குறித்துக் கருத்துத் தெரிவிக்கையில், முன்னாள் அணித் தலைவர் என்ற முறையில் திலகரத்தினவின் குற்றச்சாட்டுக்கள் மிகவும் பாரதூரமானவை என்றார்.


இக்குற்றச்சாட்டை இலங்கை விளையாட்டுத்துறை அமைச்சர் மகிந்தானந்தா அலுதாமகே மறுத்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், "திலகரத்னேவின் புகாரை நான் மறுக்கிறேன். துடுப்பாட்ட சூதாட்ட குற்றச்சாட்டு குறித்த ஆதாரத்தை விளையாட்டு அமைச்சகத்திடம் திலகரத்னே காண்பிக்க வேண்டும். அவர் எழுத்துப்பூர்வமாக தெரிவித்தால் அது குறித்து நாங்கள் பரிசீலிப்போம். துடுப்பாட்ட சூதாட்டத்தில் இலங்கை வீரர்கள் தொடர்பு வைத்து இருப்பார்கள் என்று நான் நினைக்கவில்லை. நாட்டுக்காக விளையாடும் வீரர்கள் இதுபற்றி நினைத்து பார்க்கமாட்டார்கள். இந்த புகார் அடிப்படை ஆதாரமற்றது," என்றார்.


மூலம்[தொகு]