துடுப்பாட்ட சூதாட்டக் குற்றச்சாட்டில் பாக்கித்தான் வீரர்கள் மூவருக்கு லண்டனில் சிறை

விக்கிசெய்தி இலிருந்து

வெள்ளி, நவம்பர் 4, 2011

துடுப்பாட்டச் சூதாட்டத்தில் ஈடுபட்ட குற்றம் நிரூபிக்கப்பட்டதை அடுத்து பாக்கித்தான் துடுப்பாட்ட வீரர்கள் சல்மான் பட்டிற்கு இரண்டரை ஆண்டுகள் சிறை, ஆசிப்புக்கு ஓராண்டு சிறை, ஆமிருக்கு 6 மாதங்கள் சிறைத் தண்டனை விதித்து லண்டன் நீதிமன்றம் நேற்றுத் தீர்ப்பளித்தது. சூதாட்டத் தரகர் மசார் மஜீதிற்கு இரண்டு ஆண்டுகள் மற்றும் எட்டு மாதங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.


பாக்கித்தான் அணியின் சென்ற ஆண்டு இங்கிலாந்துச் சுற்றுப் பயணத்தின் போது 'ஸ்பொட் பிக்சிங்' என்ற சூதாட்டத்தில் ஈடுபட்டதற்காகவே இவர்களுக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இதில் குற்றம் சாட்டப்பட்ட முகமது ஆமீர் தனது குற்றத்தை ஒப்புக் கொண்டார். மற்ற 2 பேரின் மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணையில் குற்றங்கள் நிரூபிக்கப்பட்டுள்ளது.


ஏற்கனவே சல்மான் பட்டுக்கு 10 ஆண்டுகளும், முகமது ஆமீருக்கு 5 ஆண்டுகளும், முகமது ஆசிபுக்கு 7 ஆண்டுகளும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் கலந்து கொள்ளச் சர்வதேச துடுப்பாட்டக் கவுன்ஸில் போட்டித் தடை விதித்திருந்தது. ஆட்டத்தில் முறைகேடு செய்தமைக்காக சிறைத் தண்டனைகளைப் பெறும் முதல் விளையாட்டு வீரர்கள் இவர்கள்தான் என்று சொல்லப்படுகிறது.


'இந்த ஒட்டுமொத்த விவகாரங்களையும் நடத்திக் காட்டியது நீங்கள்தான். ஆட்டம் நிர்ணயிக்கப்பட்ட அந்தத் தருணத்தில் ஆசிப்பையும் ஆமீரையும் பந்து வீசச் செய்ய வைத்தது நீங்கள் தான் என்று நீதிபதி குக், சல்மான் பட்டிடம் கூறினார். மொஹமட் ஆசிபிடம் அவர் கூறிய போது உங்களிடம் பணம் எதையும் கண்டுபிடிக்கவில்லை என்றாலும் ‘நோ பால்' வீசுவதில் கூட்டாக செயல்பட்டுள்ளீர்கள். நீங்கள் ஆட்டத்திற்கு முந்தையதாக நிர்ணயம் செய்வதற்கான ஆதாரங்கள் இல்லை. இதனால் உங்கள் விடயத்தை தனியான ஒரு நிகழ்வாக பார்க்க முடியாது என்றார்.


சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட சல்மான் பட், மொகமட் ஆசிப் மற்றும் சூதாட்ட முகவர் மசார் மஜீத் ஆகியோர் தெற்கு லண்டனில் உள்ள வென்டஸ்வேர்த் சிறைக்கு அனுப்பப்பட்டனர். 19 வயதான ஆமிர் மேற்கு லண்டனில் உள்ள இளம் குற்றவாளிகளுக்கான கல்வி நிறுவனத்தில் தனது 6 மாத சிறைத் தண்டனையை அனுபவிக்கவுள்ளார். எனினும் ஆமீர் பிணையில் விடுதலை பெற மனு தாக்கல் செய்வார் என அவரது வழக்கறிஞர் ஹென்ட்ரி பிளக்ஸ் பான்ட தெரிவித்தார்.


2010 ஆகத்து மாதத்தில் பாக்கித்தானுக்கும் இங்கிலாந்துக்கும் இடையே நடைபெற்ற நாலாவது தேர்வுத் துடுப்பாட்டத்தின் போது மூவரும் கைது செய்யப்பட்டனர். "நியூஸ் ஒஃப் தெ வர்ல்ட்" நிருபர் தரகர் மஜீதுக்கு 150,000 ஸ்டேர்லிங் பவுண்டுகள் வழங்கியதாகக் குற்றம் சாட்டப்பட்டது. மஜீத் ஆசிபுக்கு £65,000 உம் பட் இற்கு £10,000 உம் அமீருக்கு £2,500 பணமும் கொடுத்திருந்தார்.


தமது ஆட்டக்காரர்கள் குற்றவாளிகளாகக் காணப்பட்டது "பாக்கித்தான் துடுப்பாட்டத்துக்கு ஒரு துக்ககரமான நாள்" என பாக்கித்தான் துடுப்பாட்ட வாரியம் கூறியுள்ளது.


மூலம்[தொகு]