உள்ளடக்கத்துக்குச் செல்

துருக்கியில் கடும் நிலநடுக்கம்: 57 பேர் உயிரிழப்பு

விக்கிசெய்தி இலிருந்து

செவ்வாய், மார்ச்சு 9, 2010

துருக்கியின் கிழக்குப் பகுதிய நேற்றுத் தாக்கிய 6.0 அளவு நிலநடுக்கத்தினால் குறைந்தது 57 பேர் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


நேற்று அதிகாலை உள்ளூர் நேரப்படி 0432 மணிக்கு எலாசிக் மாகாணத்தில் பாசியூர்ட் என்ற கிராமத்தை மையமாக வைத்து இந்நிலநடுக்கம் ஏற்பட்டது. தொடர்ந்து 40 தடவைகள் பின்னதிர்ச்சிகள் ஏற்பட்டுள்ளன.


அருகிலிருந்த ஒக்குலார் என்ற கிராமம் முற்றக அழிந்துள்ளதாகவும் மேலும் பல சேதமுற்றதாகவும் உள்ளூர் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.


கட்டிட இடிபாடுகளுக்கிடையில் பலர் சிக்குண்டுள்ளனர் என்றும் அறிவிக்கப்படுகிறது. இக்கிராமங்களில் பல கட்டிடங்கள் களிமண்ணால் செய்யப்பட்ட செங்கட்டிகளால் கட்டப்பட்டவை ஆகும்.


ஆறு கிராமங்கள் இப்பூகம்பத்தில் மோசமாகப் பாதிக்கப்பட்டன. வீட்டிலிருந்த மக்கள் அச்சத்தால் வெளியில் ஓடினர். வீதியெங்கும் மக்கள் வெள்ளமாகக் காணப்பட்டது.


பள்ளிவாசல்களின் மினாராக்கள், மாளிகையின் கோபுரங்கள் இடிந்து வீழ்ந்ததால் தெருக்கள் எங்கும் இடிபாடுகள் காணப்பட்டன. போக்குவரத்துகளும் தடைப்பட்டன. மீட்புப்பணிகளில் ஈடுபட காவல்துறையினர், இராணுவத்தினர் வரவழைக்கப்பட்டனர்.


நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட கிராமங்களில் புனருத்தாரண நடவடிக்கைகளை மேற்கொள்ள அரசாங்கம் துரித நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.


"களிமண் கட்டடங்கள் கட்டுவது இங்கு உள்ளூர் பாரம்பரியமாகும். துரதிர்ஷ்டவசமாக, இதனால் பலத்த சேதங்களைக் கண்டு விட்டோம்", எனத் துருக்கிப் பிரதமர் தெரிவித்தார்.


துருக்கியில் 1999 ஆம் ஆண்டில் 7.4 அளவு நிலநடுக்கம் ஏற்பட்டதில் 17,000 பேர் இறந்தனர்.

மூலம்

[தொகு]