துருக்கி அரசிற்கு எதிரான போராட்டத்திற்கு ஆதரவாக தொழிலாளர்கள் வேலைநிறுத்தம்

விக்கிசெய்தி இலிருந்து

வியாழன், சூன் 6, 2013

துருக்கி அரசிற்கு எதிராக நடைபெற்று வரும் போராட்டத்திற்கு மேலும் வலுச் சேர்க்கும் வகையில் அந்நாட்டுப் பொதுத்துறைகளில் பணியாற்றும் சுமார் 2 லட்சத்து 50 ஆயிரம் ஊழியர்களும் செவ்வாயன்று பணிகளைப் புறக்கணித்து வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


துருக்கியை ஆளும் பிரதமர் ரைய்ப் ஏர்டோகன் தலைமையிலான அரசு, தொழிலாளர் நலச் சட்டங்களில் பல்வேறு திருத்தங்களை மேற்கொள்ள முடிவு செய்துள்ளது. தொழிலாளர்களின் உரிமையைப் பறிக்கும் வகையில் உள்ள இந்த சட்டத்திருத்தத்திற்கு தொழிற்சங்கங்கள் கடும் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளன. இந்நிலையில், இந்த சட்ட திருத்தங்களை கண்டித்து கடந்த வாரம் அந்நாட்டின் இஸ்தான்புல் நகரில் உள்ள டாக்சிம் சதுக்கத்தில் அரசிற்கு எதிராக போராட்டக்காரர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது அந்நாட்டின் காவல்துறை கண்மூடித்தனமான தாக்குதலை நடத்தியது. இந்தத் தாக்குதலினால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இருநூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். மேலும், காவல்துறையினர் பயன்படுத்திய கண்ணீர்ப்புகைக் குண்டு தாக்குதல் உள்ளிட்டவைகளால் பலர் பார்வையிழந்ததுடன், ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். துருக்கி அரசின் இத்தகைய தொழிலாளர் விரோத மற்றும் பயங்கரவாத நடவடிக்கையை கண்டித்து அந்நாட்டில் உள்ள பல்வேறு தொழிற்சங்கங்கள் மற்றும் அரசியல் கட்சியினர், சனநாயக அமைப்புகளின் சார்பில் கடந்த ஒருவார காலமாக பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் இப்போராட்டத்திற்கு மேலும் வலுசேர்க்கும் வகையில் அந்நாட்டின் பொதுத்துறைகளில் பணியாற்றும் சுமார் இரண்டரை லட்சம் ஊழியர்கள் பணிகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்தனர்.


இவ்வேலை நிறுத்தப் போராட்டத்தை அடுத்து, அந்நாட்டின் பொதுத்துறை நிறுவன பணிகள் அனைத்தும் முற்றிலும் முடங்கின. அரசிற்கு எதிரான இந்த எதிர்ப்பு போராட்டங்கள் நாட்டின் பல்வேறு நகரங்களுக்கும் பரவியுள்ளன. குறிப்பாக அந்நாட்டின் தலைநகர் அங்காரா மற்றும் கடற்கரை நகரங்களான அன்டாலயா, இஸ்மீர் உள்ளிட்ட 67 நகரங்களுக்கு இந்த எதிர்ப்பு போராட்டங்கள் பரவியுள்ளது. இதனிடையே, இப்போராட்டத்தின் போது காவல்துறையினருக்கும், ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையில் நடைபெற்ற மோதலின்போது ஆர்ப்பாட்டக்காரர்கள் இருவர் உயிரிழந்துள்ளனர்.

மேற்கோள்கள்[தொகு]