தென்னாப்பிரிக்காவில் விருத்த சேதனம் செய்த 20 சிறுவர்கள் உயிரிழப்பு

விக்கிசெய்தி இலிருந்து

சனி, சூன் 19, 2010

தென்னாப்பிரிக்காவின் கிழக்கு கேப் மாகாணத்தில் சட்டவிரோதமாக விருத்த சேதனம் செய்யப்பட்ட 20 சிறுவர்கள் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.


"இந்த இறப்புகள் அனைத்து கடந்த 12 நாட்களில் இடம்பெற்றுள்ளன, இவற்றில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 9 பேர் உயிரிழந்துள்ளனர்," என மாகாண சுகாதாரத்துறைப் பேச்சாளர் கூறினார்.


விருத்த சேதனத்தில் ஈடுபட்ட 11 பள்ளிகளில் இருந்து 60 சிறுவர்கள் காப்பாற்றப்பட்டுள்ளனர். இந்தப் பள்ளிகள் அனைத்தும் தற்போது மூடப்பட்டுள்ளன.


"காப்பாற்றப்பட்ட 60 சிறுவர்களும் கடுமையான காயங்களினால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இவர்களில் 4 பேருக்கு அவர்களின் ஆண்குறியையே முற்றாக அகற்ற வேண்டி இருக்கிறது. இது குறித்த சிகிச்சைக்கு குறித்த சிறுவர்களின் பெற்றோரிடம் இருந்து ஒப்புதல் பெற வேண்டி இருக்கிறது," என சுகாதாரத்துறைப் பேச்சாளர் சிஸ்வி குப்பேலோ தெரிவித்தார்.


சட்டவிரோதமான சிருத்த சேதனப் பள்ளிகள் கிழக்கு கேப் பகுதியில், குறிப்பாக கிராமப் பக்கங்களில் அதிகம் உள்ளன. "பயிற்றுவிக்கப்படாத மருத்துவர்கள் பணம் சம்பாதிப்பதற்காக இவற்றை மேற்கொள்ளுகின்றனர்," என ஜொகான்னஸ்பேர்கில் உள்ள பிபிசி செய்தியாளர் பும்சா பீலானி அறிவித்தார்.


விருத்த சேதனம் என்பது ஆண்மைத்தன்மைக்கான வழி என தெற்கு ஆப்பிரிக்க இனக்குழுக்கள் சில நம்புகின்றன. விருத்த சேதனம் செய்வது குறிப்பாக கோசா மற்றும் இண்டெபெல் ஆகிய இனக்குழுகளிடையே பொதுவான வழக்கமாகும்.


மருத்துவ விருத்த சேதனம் எயிட்சு நோயைக் கட்டுப்படுத்த உதவுகிறது என்ற நம்பிக்கை காரணமாக சூளு இனத்தவரிடையே இப்பழக்கத்தை மீண்டும் அறிமுகப்படுத்த சூளு அரசர் குட்வில் சுவெலித்தினி முனைந்து வருகிறார்.

மூலம்[தொகு]