தென்னாப்பிரிக்காவில் வெள்ளையின மேலாதிக்கவாதிகளின் தலைவர் படுகொலை
திங்கள், ஏப்பிரல் 5, 2010
- 4 சனவரி 2018: தென் ஆப்பிரிக்க தொடருந்து விபத்தில் குறைந்தது 14 பேர் பலி
- 13 ஏப்பிரல் 2014: தென்னாப்பிரிக்காவின் அரசுப் பள்ளிகளில் மீண்டும் தமிழ் மொழிப்பாடம் கற்றுத் தரப்படும்
- 11 திசம்பர் 2013: நெல்சன் மண்டேலாவின் உடலுக்கு உலகத் தலைவர்கள் அஞ்சலி
- 6 திசம்பர் 2013: தென்னாப்பிரிக்கத் தலைவர் நெல்சன் மண்டேலா காலமானார்
- 13 சூன் 2013: தென்னாப்பிரிக்க முன்னாள் தலைவர் நெல்சன் மண்டேலாவுக்கு தொடர்ந்து சிகிச்சை
தென்னாப்பிரிக்காவில் வெள்ளையின மேலாதிக்கவாதிகளின் தலைவர் யூஜின் டெரபிளான்ச் சனிக்கிழமை அன்று தனது வீட்டில் வைத்து அடித்துக் கொலை செய்யப்பட்டார்.
இக்கொலையை அடுத்து கறுப்பினத்தவர்களுக்கு எதிராக வன்முறைகளைத் தூண்ட வேண்டாம் என அந்நாட்டின் தலைவர்கள் வெள்ளையின மேலாதிக்கவாதிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
69 வயதான டெரபிளான்ச் வடமேற்கு மாகாணத்தின் வெண்டர்ஸ்டோர்ப் என்ற இடத்தில் உள்ள அவரது பண்ணையில் வைத்துக் கொலை செய்யப்பட்டார். தொழிலாளர்களுக்கு சம்பள நிலுவை வழங்கப்படாமையே இக்கொலைக்குக் காரனம் என காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். இது தொடர்பாக இரு பணியாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர் கொலை செய்யப்பட்ட அறையில் கத்தியொன்றும் வேறு சில ஆயுதங்களும் மீட்கப்பட்டுள்ளது. டெரபிளான்ச் கட்டிலில் வைத்து அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளதுடன், அவரது முகத்திலும் தலையிலும் காயங்களும் உள்ளன.
டெரபிளான்ச் சார்ந்திருக்கும் AWB என்ற ஆப்பிரிக்கானர் எதிர்ப்பு இயக்கத்தை போவர்களின் வம்சாவழியினரின் உரிமைகளை வென்றெடுப்பதற்காக 1973 இல் இவர் ஆரம்பித்தார். 1980களில் இவ்வியக்கம் மிகவும் பிரபலமானது. இவரது கட்சி 1993 இல் அன்றைய இனவொதுக்கல் கொள்கையை முடிவுக்குக் கொண்டுவர ஜொகான்னர்ஸ்பேர்க் நகரில் உலக வர்த்தக மையத்தில் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளின் போது அக்கட்டடத்தின் உள்ளே வாகனம் ஒன்றைச் செலுத்தி தனது எதிர்ப்பைக் காட்டியது.
இவரது பண்ணைப் பணியாளர் ஒருவரின் கொலை முயற்சி தொடர்பாக இவர் 2001 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு 2004 இல் விடுவிக்கப்பட்டார்.
டெரபிளான்சின் படுகொலையை அரசுத்தலைவர் சூமா வன்மையாகக் கண்டித்துள்ளார். ”இது ஒரு கோழைத்தனமான செயல்” என வர்ணித்தார்.
இக்கொலை நாட்டில் இன வன்முறையைத் தூண்டி விடும் என்பதை தென்னாப்பிரிக்க அரசுத்தலைவர் சூமா அறிந்துள்ளார் என பிபிசி செய்தியாளர் அறிவிக்கின்றார். அரசு இதனை மிகவும் அவதானமாகக் கையாள வேண்டியிருக்கும் என அவர் தெரிவிக்கிறார்.
"இக்கொலைக்கு நாம் பழி வாங்குவோம்”, என ஆப்பிரிக்கானர் எதிர்ப்பியக்க செயலாளர் விசாகி பிபிசி இடம் தெரிவித்தார்.
"டெரபிளான்சின் படுகொலை கறுப்பினத்தவர்கள் வெள்ளையினத்தவர்களின் மீது போரை அறிவித்துள்ளதாகவே நாம் கருதுகிறோம்.”
1994 இல் இனவொதுக்கல் முடிவுக்கு வந்த பின்னர் ஏறத்தாழ 3,000 வெள்ளையின பண்ணையாளர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இவற்றில் 2 விழுக்காடு அரசியல், மற்றும் இனத்துவேசம் காரணம் என 2003 ஆண்டில் வெளியிடப்பட்ட அரசு அறிக்கை தெரிவிக்கிறது.
இதேவளையில், தென்னாப்பிரிக்காவில் பல்வேறு வன்முறைகளில் தினமும் 50 கறுப்பினத்தவர்கள் கொலை செய்யப்படுகின்றார்கள் என வேறொரு புள்ளிவிபரம் தெரிவிக்கிறது.
மூலம்
[தொகு]- "South Africa warns against Terreblanche revenge". பிபிசி, ஏப்ரல் 5, 2010
- "தென்னாபிரிக்காவின் வெள்ளையின மேலாதிக்கவாதி அடித்துக்கொலை". தினக்குரல், ஏப்ரல் 5, 2010
- "Eugene Terre'Blanche killing – white supremacists vow revenge". கார்டியன், ஏப்ரல் 4, 2010