உள்ளடக்கத்துக்குச் செல்

தென்னாப்பிரிக்காவில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் மீது சூடு, 34 பேர் உயிரிழப்பு

விக்கிசெய்தி இலிருந்து

சனி, ஆகத்து 18, 2012

தென்னாப்பிரிக்காவில் பிளாட்டினம் சுரங்கத் தொழிற்சாலை ஒன்றில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் மீது காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 34 தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர். மேலும் 78 பேர் காயமடைந்தனர். 200 இற்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டனர்.


யொகான்னசுபர்க் நகரில் இருந்து 100 கிமீ வடமேற்கே இந்தச் சம்பவம் இடம்பெற்றது. தொலைவில் சம்பவம் நடந்த இடத்துக்கு நேற்று சென்று பார்த்த தென்னாப்பிரிக்க அரசுத்தலைவர் யாக்கோபு சூமா, இந்நிகழ்வு தொடர்பாக விசாரணைகள் மேற்கொள்ளப்படும் என அறிவித்துள்ளார்.


காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியமைக்கான காரணம் தெரிவிக்கப்படவில்லை. வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டவர்கள் சிலர் கத்திகள், மற்றும் வாள்களுடன் காவல்துறையினரை நோக்கிச் சென்றதாகவும், காவல்துறையினர் அவர்களை நோக்கிச் சுட்டதாகவும் நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர்.


4,000 முதல் 5,000 ராண்டுகள் ($484-$605) வரை சம்பளமாகப் பெறும் சுரங்கத் தொழிலாளர்கள், 12,500 ராண்டுகள் ($1,512) உயர்வு கோரிப் போராடி வருகிறார்கள். தென்னாப்பிரிக்கா உலகில் மிக அதிகமாக பிளாட்டினம் உற்பத்தி செய்யும் நாடாகும்.


மூலம்

[தொகு]