உள்ளடக்கத்துக்குச் செல்

தெற்கு சூடானில் ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சி முறியடிக்கப்பட்டதாக அரசு அறிவிப்பு

Checked
விக்கிசெய்தி இலிருந்து

செவ்வாய், திசம்பர் 17, 2013

தெற்கு சூடானில் ஆட்சிக் கவிழ்ப்புக்கான முயற்சி ஒன்று முறியடிக்கப்பட்டதாக அந்நாட்டு அரசு அறிவித்து ஒரு நாளாகியும் தலைநகர் சூபாவில் துப்பாக்கிச் சூடு சத்தங்கள் தொடருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.


அரசு மாளிகையைச் சுற்றிலும், மற்றும் தலைநகரின் பிற பாகங்களிலும் கனரக ஆயுதங்கள் மூலம் தாக்குதல் சத்தங்கள் கேட்டு வருகின்றன. அங்குள்ள இரண்டு ஐநா அலுவலகங்களில் ஆயிரக்கணக்கானோர் தஞ்சம் அடைந்துள்ளனர். தலைநகரில் உள்ள பன்னாட்டு விமான நிலையம் மூடப்பட்டுள்ளது.


கடந்த சூலை மாதத்தில் பதவியில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் துணை சனாதிபதி ரீக் மச்சாருக்கு ஆதரவான படையினரே ஞாயிற்றுக்கிழமை ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியில் இறங்கியதாக அரசுத்தலைவர் சால்வா கீர் தெரிவித்துள்ளார். இவ்வன்முறைகளில் குறைந்தது 26 பேர் கொல்லப்பட்டனர். கடந்த ஞாயிறன்று ஆளும் கட்சியின் கூட்டம் ஒன்றின் போது சீருடை தரித்தவர்கள் பலர் துப்பாக்கிச் சூடு நடத்தியதை அடுத்தே வன்முறைகள் ஆரம்பமாயின என அரசுத்தலைவர் கூறினார். ரீக் மச்சார் தற்போது தலைமறைவாகியுள்ளார்.


இரவுநேர ஊரடங்கு உத்தரவு தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. குறைந்தது நான்கு முன்னாள் அமைச்சர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தலைநகர் தமது முழுக் கட்டுப்பாட்டுள் இருப்பதாக அரசு அறிவித்துள்ளது.


பதவியில் இருந்து நீக்கப்பட்ட ரீக் மச்சார் 2015 அரசுத்தலைவர் தேர்தலில் போட்டியிடப்போவதாக அறிவித்திருந்தார். தற்போது இவர் தெற்கு சூடானின் ஆளும் கட்சியான சூடான் மக்கள் விடுதலை இயக்கத்தின் அதிருப்தியாளர்களுக்குத் தலைமை தாங்குகிறார்.


தெற்கு சூடான் 2011 இல் சூடானிடம் இருந்து விடுதலை பெற்றது, ஆனாலும் அங்கு ஒரு நிலையான ஆட்சி ஒன்றை அமைக்க ஆட்சியாளர்களால் முடியாமல் உள்ளதாக செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.


மூலம்

[தொகு]