உள்ளடக்கத்துக்குச் செல்

தெற்கு சூடான் பேச்சுவார்த்தைகளில் தடங்கல்

விக்கிசெய்தி இலிருந்து

சனி, சனவரி 4, 2014

தெற்கு சூடானில் கிளர்ச்சியாளர்களுக்கும் அரசுப் படைகளுக்கும் இடையில் இடம்பெற்றுவரும் வன்முறைகளை முடிவுக்குக் கொண்டு வரும் பொருட்டு இரு தரப்புகளுக்கும் இடையே எத்தியோப்பியாவில் ஆரம்பமாகவிருந்த பேச்சுவார்த்தைகள் பின்போடப்பட்டுள்ளன.


அரசுத்தலைவர் சால்வா கீர், மற்றும் பதவியில் இருந்து நீக்கப்பட்ட துணை அரசுத்தலைவர் ரீக் மச்சாருக்கும் இடையில் இன்று சனிக்கிழமை நேருக்கு நேர் பேச்சுவார்த்தைகள் ஆரம்பமாகவிருந்தன. புதிய திகதி அறிவிக்கப்படவில்லை.


இதற்கிடையில் தெற்கு சூடானில் இரு தரப்புக்குமிடையே சண்டைகள் தொடர்ந்த வண்ணம் உள்ளது. டிசம்பர் 15 ஆம் நாள் ஆரம்பமான சண்டைகளில் குறைந்தது 1,000 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 180,000 இற்கும் அதிகமானோர் இடம்பெயர்ந்துள்ளனர். இடம்பெயர்ந்தோர் பலர் குடிநீர் பற்றாக்குறையால் பெரும் சிரமத்துக்குள்ளாகியிருப்பதாக நிவாரண நிறுவனங்கள் அறிவித்துள்ளன.


வடக்கு மாநிலமான யுனிட்டியில் போர், மற்றும் பென்டியூ நகரங்களை கிளர்ச்சியாளர்களிடம் இருந்து மீளக் கைப்பற்றுவதற்கு அரசுப் படையினர் போராடி வருகின்றனர். இன்னும் 24 மணி நேரத்தில் போர் நகரை நாம் மீளக் கைப்பற்றி விடுவோம் என அரசுப் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.


தெற்கு சூடான் 2011 ஆம் ஆண்டில் சூடானிடம் இருந்து விடுதலை பெற்றது.


மூலம்

[தொகு]