உள்ளடக்கத்துக்குச் செல்

தெற்கு சூடானில் இருந்து வெளியேறியோரை ஏற்றிச் சென்ற படகு மூழ்கியதில் 200 பேர் வரை உயிரிழப்பு

விக்கிசெய்தி இலிருந்து

செவ்வாய், சனவரி 14, 2014

தெற்கு சூடானில் மலாக்கால் நகரில் இடம்பெற்று வரும் சண்டைகளினால் இடம்பெயர்ந்தோரை ஏற்றிச் சென்ற படகு ஒன்று நைல் நதியில் கவிழ்ந்ததில் 200 இற்கும் அதிகமானோர் உயிரிழந்ததாக இராணுவத்தினர் அறிவித்துள்ளனர். ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற இவ்விபத்தில் பெண்கள் குழந்தைகளும் இறந்துள்ளனர்.


தெற்கு சூடான் அரசுப் படையினருக்கும் கிளர்ச்சிக்காரர்களுக்கும் இடையில் இடம்பெற்று வரும் சண்டைகளினால் 350,000 இற்கும் அதிகமானோர் இடம்பெயர்ந்துள்ளனர் என ஐக்கிய நாடுகள் அறிவித்துள்ளது. தெற்கு சூடானின் எண்ணெய்க்கிணறுகளுக்கு மலாக்கால் நகரினூடாகவே செல்ல வேண்டும்.


அண்மைக் காலத்தில் மலாக்கால் நகரில் உள்ள ஐநா தளத்துக்கு 9,000 பேர் இடம்பெயர்ந்து வந்துள்ளனர் என ஐநா பேச்சாளர் தெரிவித்தார்.


இதற்கிடையில், நாட்டில் இடம்பெற்று வரும் சண்டையை முடிவுக்குக் கொண்டு வரும் பொருட்டு எத்தியோப்பியத் தலைநகர் அடிஸ் அபாபாவில் அமைதிப் பேச்சுக்கள் இடம்பெற்று வருகின்றன.


அரசுத்தலைவர் சல்வா கீருக்கு ஆதரவானோருக்கும், முன்னாள் பிரதி அரசுத்தலைவர் ரீக் மச்சாருக்கு ஆதரவானோருக்கும் இடையில் டிசம்பர் 15 இல் சண்டைகள் ஆரம்பமானதில் இருந்து ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.


தெற்கு சூடான் 2011 ஆம் ஆண்டில் சூடானில் இருந்து தனிநாடாகப் பிரிந்து சென்றது.


மூலம்[தொகு]