தெலுங்கானாவில் பேருந்து-தொடருந்து விபத்தில் 20 மாணவர்கள் உயிரிழந்தனர்
- 27 திசம்பர் 2015: தெலங்கானா மகா சண்டி யாக பந்தலில் தீ விபத்து
- 28 மே 2015: இந்தியாவில் வெப்ப தாக்கத்தால் இறந்தவர்களின் எண்ணிக்கை 1500க்கும் அதிகமாகியுள்ளது
- 24 சூலை 2014: புதிய தெலுங்கானா மாநிலம் - இந்தியா அறிவிப்பு
- 24 சூலை 2014: தெலுங்கானாவில் பேருந்து-தொடருந்து விபத்தில் 20 மாணவர்கள் உயிரிழந்தனர்
- 31 சூலை 2013: இந்தியாவின் 29வது மாநிலமாக தெலுங்கானாவை உருவாக்க நடுவண் ஆளும் கூட்டணி முடிவு
வியாழன், சூலை 24, 2014
இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தில் பள்ளிச் சிறுவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்றை தொடருந்து ஒன்று மோதியதில் குறைந்தது 20 மாணவர்கள் கொல்லப்பட்டனர். பேருந்தின் சாரதியும் உயிரிழந்தார். மேலும் பலர் காயமடைந்தனர்.
பேருந்து பாதுகாப்பற்ற கடவை ஒன்றைக் கடக்க முற்படுகையிலேயே பயணிகள் தொடருந்து ஒன்று அதனை மோதியுள்ளது. பேருந்து பல நூறு மீட்டர்கள் தூரம் தொடருந்துடன் இழுத்துச் செல்லப்பட்டுள்ளது. மெதாக் மாவட்டத்தில் மசாய்ப்பேட்டை என்ற ஊரில் இன்று வியாழக்கிழமை இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.
13 பேர் விபத்து நடந்த இடத்திலேயே உயிரிழந்தனர். விபத்து நடந்தவுடன் உள்ளூர் மக்கள் பேருந்தில் சிக்கிய சில சிறுவர்களைக் காப்பாற்ற முடிந்தது. காயமடைந்தோர் மருத்துவமனைகளுக்கு எடுத்துச் செல்லப்பட்டனர். முதலமைச்சர் கே. சந்திரசேகர் ராவ் மருத்துவமனைக்கு சென்று காயமடைந்தவர்களைப் பார்வையிட்டார். இப்பேருந்தில் 5 முதல் 12 வயது வரையான சிறுவர்கள் பயணம் செய்துள்ளனர்.
விபத்துக் குறித்து காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இந்தியாவில் சுமார் 15,000 பாதுகாப்பற்ற கடவைகள் உள்ளன. இதனால் ஆண்டு தோறும் இங்கு பல நூற்றுக் கணக்கானோர் உயிரிழக்கின்றனர்.
மூலம்
[தொகு]- 20 students killed as train rams bus in Medak, தி இந்து, சூலை 24, 2014
- India: School bus and train crash kills 13 children, பிபிசி, சூலை 24, 2014