தொங்கா மன்னர் ஐந்தாம் ஜோர்ஜ் தூப்போ காலமானார்

விக்கிசெய்தி இலிருந்து

திங்கள், மார்ச்சு 19, 2012

தெற்கு பசிபிக் நாடான தொங்காவின் மன்னர் ஐந்தாம் ஜோர்ஜ் தூப்போ ஹொங்கொங்கில் உள்ள மருத்துவமனை ஒன்றில் தனது 62வது அகவையில் காலமானார் என அறிவிக்கப்பட்டுள்ளது.


பொலினேசியா நாடுகளில் மன்னராட்சி உள்ள ஒரேயொரு நாடு தொங்கா ஆகும். 2006 ஆம் ஆண்டில் பதவிக்கு வந்த இவர் அந்நாட்டில் பல சனநாயக சீர்திருத்தங்களை அறிவித்தவர்.


170-தீவுகளைக் கொண்ட தொங்காவில் 165 ஆண்டு கால நிலவுடைமை முறை நவம்பர் 2010 ஆம் ஆண்டில் முடிவுக்கு வந்து தமது முதலாவது நாடாளுமன்றத்தை அந்நாட்டு மக்கள் தெரிவு செய்தனர். வாக்களிப்புக்கு முன்னர் மன்னர் தூப்போ தமது நிறைவேற்று அதிகாரங்களை நடாளுமன்றத்திற்கும், அமைச்சரவைக்கும் ஒப்படைப்பதாக அறிவித்திருந்தார்.


செப்டம்பர் 2006 ஆம் ஆண்டில் நான்காம் தாவுஃபாஹாவ் தூப்போ இறந்த பின்னர் ஜோர்ஜ் தூப்போ பதவிக்கு வந்தார். ஆனாலும் நாட்டில் சீர்திருத்தங்களுக்கு ஆதரவாகக் குழப்பநிலை நிலவியதை அடுத்து அவரது பதவிப்பிரமாணம் 2008 ஆகத்து மாதத்திலேயே இடம்பெற்றது.


ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் படித்துப் பட்டம் பெற்ற ஜோர்ஜ் தூப்போ திருமணமாகாதவர். தனது சகோதரர் துப்போடோவா லவாக்கா என்பவரை நாட்டின் அடுத்த மன்னராக அவர் அறிவித்திருந்தார்.


மூலம்[தொகு]