தோற்சுருக்கத்துக்கு முதன்முதலாக மாத்திரை மருந்து

விக்கிசெய்தி இலிருந்து

வியாழன், செப்டெம்பர் 22, 2011

முகத்தின் சருமத்தில் சுருக்கங்கள் ஏற்பட்டு விட்டால் வயது கூடி அழகு குன்றிப்போவதைக் காட்டுகிறது. முகச்சுருக்கம் நீங்க எத்தனையோ களிம்புகள் இருந்தாலும் அவற்றின் பயன் முழுமையாகக் கிடைப்பதில்லை, இவற்றைத் தீர்த்து வைப்பதற்கு இங்கிலாந்தின் ஆய்வாளர்கள் புதிய மாத்திரை ஒன்றைக் கண்டுபிடித்துள்ளனர்.


இயற்கை உணவுப்பொருட்களில் இருந்து பிரித்தெடுக்கப்பட்ட கலவைகளால் இம்மருந்து உருவாக்கப்பட்டுள்ளது. தோலின் ஆழப்பகுதியில் உள்ள கொலாசின் எனப்படும் புரதமே தோல் சுருக்கமின்றி தொனியுடன் விளங்குவதற்குக் காரணம். வயது செல்லச் செல்ல இப்புரதம் குறைவடைவதால் தோலில் சுருக்கம் ஏற்படுகின்றது. இம்மருந்து மரபணு மட்டத்தில் தொழிற்பட்டு கொலாசினின் உற்பத்தியைக் கூட்டுகிறது, இதனால் தோல் மீண்டும் பளபளப்பை அடைகின்றது.


இங்கிலாந்து, பிரான்சு, செருமனி போன்ற பகுதிகளில் நான்கு பிரிவுகளாக இவ்வாய்வு நடாத்தப்பட்டது. 480 பெண்களில் நடத்தப்பட்ட ஆய்வில் அவர்களது கண்ணைச் சுற்றிக் காணப்பட்ட சுருக்கங்கள் 14 வாரங்களில் 30%மாகக் குறைந்ததை அவதானித்தனர். தோலின் மாதிரிகள் எடுக்கப்பட்டு ஆய்வுகூட சோதனை செய்ததில் கொலாசின் அளவு உயர்ந்தமை உறுதிப்படுத்தப்பட்டது.


இம்மருந்துக்கு ஒரு மாதச் செலவு கிட்டத்தட்ட £35 ஆகும் என்று கூறப்படுகின்றது. ஏற்கனவே பயன்பாட்டில் இருக்கும் களிம்புகள் மேற்தோல் மட்டத்தில் செயற்படுகின்றன, ஆனால் இம்மருந்தோ உட்தோல் பகுதியில் என்பதால் மிகவும் பயனுள்ள விளைவுகள் கிடைக்கின்றன.


அடுத்த மாதமே இம்மருந்து விற்பனைக்கு வர இருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.


மூலம்[தொகு]