நடிகை குஷ்புவின் பாலியல் குறிப்புகளுக்கு எதிராக இந்திய நீதிமன்றம் கருத்து

விக்கிசெய்தி இல் இருந்து
Jump to navigation Jump to search

புதன், சனவரி 20, 2010


திருமணத்துக்கு முன்பு பெண்கள் பாதுகாப்பான உடலுறவு கொள்வதில் தவறு ஏதும் இல்லை என்று தமிழ் நடிகை குஷ்பு தெரிவித்த கருத்தில் குற்றமில்லை என்று சொல்ல முடியாது என இந்திய உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.


இந்தியாவில் மாறிவரும் உடலுறவுப் பழக்கங்கள் தொடர்பாக, நான்கு ஆண்டுகளுக்கு முன்பு தமிழ் பத்திரிக்கைக்கு நடிகை குஷ்பு பேட்டியளித்திருந்தார்.


அதில், பெண்கள் திருமணத்துக்கு முன் உடலுறவு வைத்துக் கொள்வதில் தவறில்லை என்றும், அவ்வாறு உறவு கொள்ளும்போது உரிய பாதுகாப்பு முறைகளைக் கையாள வேண்டும் என்றும் கூறியிருந்தார். மேலும், படிப்பறிவுள்ள ஓர் ஆண்மகன், தனது மனைவி கற்புடன் இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது தவறு என்றும் கூறியிருந்தார்.


இதையடுத்து குஷ்புவுக்கு எதிராக தமிழகம் முழுவதும் பல்வேறு நீதிமன்றங்களில் வழக்குத் தொடரப்பட்டது. அந்த வழக்குகளை ரத்து செய்யக் கோரி நடிகை குஷ்பு உயர் நீதி்மன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.


குறறச்சாட்டுக்களுக்கு பூர்வாங்க ஆதாரம் இருப்பதாகக் கூறி, குஷ்புவின் கோரிக்கையை உயர்நீதிமன்றம் நிராகரித்தது.


அதை எதிர்த்து நடிகை குஷ்பு உச்சநீதிமன்றத்தில் செய்த மேல்முறையீடு தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் முன் விசாரணைக்கு வந்தது. தான் குற்றம் ஏதும் செய்யவில்லை என்றும், யாரையும் தனிப்பட்ட முறையில் குறிப்பிட்டு அத்தகைய கருத்தைத் தெரிவிக்கவில்லை என்றும் குஷ்பு தனது மனுவில் தெரிவித்திருந்த கருத்துக்களை நீதிமன்றம் ஏற்கவில்லை.


தனது குறிப்புகள் தன்னுடைய தனிப்பட்ட கருத்தே என்றும், சமூகத்தில் பொதுவாகப் பெண்களின் நிலைமையையே எடுத்துரைத்ததாகவும் குஷ்பு வாதிட்டார்.


குஷ்புவுக்கு எதிரான வழக்குகள் அவரது தனி மனித உரிமையை மீறுவதாகவும், அவரது பேச்சுச் சுதந்திரத்தைப் பறிப்பதாகவும் உள்ளதாக பெண்ணியவாதிகளும் மனித உரிமை ஆர்வலர்களும் வாதிடுகின்றனர்.


எந்தச் சூழ்நிலையில், எத்தகைய கேள்விக்கு அவர் அவ்வாறு பதிலளித்திருக்கிறார் என்ற விவரங்களைத் தெரிவிக்க வேண்டும் என்று நடிகை குஷ்புவுக்கு தலைமை நீதிபதி இன்று உத்தரவிட்டார்.


குஷ்புவுக்கு எதிராக நீதிமன்றம் தீர்ப்பு வழங்கும் பட்சத்தில் சிறைத்தண்டனையோ அல்லது அபராதமோ அவருக்கு விதிக்கப்படலாம்.

மூலம்