நடுவண் புலனாய்வுப் பிரிவு தயாநிதி மாறனை விசாரணை செய்ய இடமுண்டு

விக்கிசெய்தி இலிருந்து

செவ்வாய், சூன் 7, 2011

இந்தியாவில் இரண்டாம் தலைமுறை அலைக்கற்றை ஊழல் விவகாரம் தொடர்பாக தயாநிதி மாறனுக்கு எதிராக சிவசங்கரன் அளித்துள்ள வாக்குமூலம் முக்கிய சாட்சியமாக மாற இடமுண்டு எனத் தெரிவிக்கப்படுகிறது. இதை வைத்து ஏர்செல் நிறுவனத்திற்கு இரண்டாம் தலைமுறை அலைக்கற்றை அனுமதிப்பத்திரம் தரப்பட்ட விவகாரத்தில் எப்ஐஆர் பதிவு செய்ய நடுவண் புலனாய்வுப் பிரிவு தயாராகி விட்டது. பிரதமரின் அனுமதிக்காக தற்போது காத்துள்ளதாக தெரிகிறது.


தயாநிதி மாறன் மீதான குற்றச்சாட்டு இதுதான் - சிவசங்கரன் வசம் ஏர்செல் நிறுவனம் இருந்தபோது இரண்டாம் தலைமுறை அலைக்கற்றை (2ஜி) அனுமதிப்பத்திரம் கோரி அவர் விண்ணப்பித்தார். ஆனால் தயாநிதி மாறன் அனுமதிப்பத்திரம் தரவில்லை. மாறாக அவரை, மலேசியாவைச் சேர்ந்த மேக்ஸிஸ் நிறுவனத்திடம் ஏர்செல் நிறுவன பங்குகளை விற்குமாறு தயாநிதி மாறன் நெருக்கினார். இதையடுத்து வேறு வழியில்லாமல் சிவசங்கரன், ஏர் செல் நிறுவனத்தை மேக்ஸிஸ் நிறுவனத்தின் ஆனந்தகிருஷ்ணனிடம் விற்று விட்டார்.


இந்த ஆனந்தகிருஷ்ணன், சன் டிவியின் நிறுவனரான கலாநிதி மாறனுக்கு மிகவும் நெருக்கமானவர். ஏர்செல் நிர்வாகம் மாறிய உடனேயே 14 அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டன. அடுத்த சில மாதங்களில் சன் டிவியின் சன் டைரக்ட் நிறுவனத்தில் ரூ. 800 கோடியை ஆனந்தகிருஷ்ணனின் மேக்ஸிஸ் நிறுவனம் முதலீடு செய்தது. இதுதான் தற்போது சர்ச்சையாகியுள்ளது. இதுகுறித்த விவரங்களை டெஹல்கா இணையதளம் செய்தியாக வெளியிட்டது. இதைத்தான் தற்போது சிபிஐ தீவிரமாக விசாரிக்கத் தொடங்கியுள்ளது.


இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட சிவசங்கரனிடம் நேற்று நடுவண் புலனாய்வுப் பிரிவு நீண்ட நேரம் விசாரணை நடத்தியது. அப்போது இது தொடர்பாக மேற்குறித்தவாறு சிவசங்கரன் வாக்குமூலம் அளித்துள்ளார். பிரதமர் ஒப்புதல் கிடைத்தவுடன் தயாநிதி மாறன் மீது வழக்குப் பதிவு செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதையடுத்து அவரை நேரில் வரவழைத்து நடுவண் புலனாய்வுப் பிரிவு விசாரணை நடத்தும் என்றும் தெரிகிறது. இந்நிலையில், தயாநிதி தன் மீதான குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கையில்"நான் குற்றமற்றவன் என்பதை முறையான அமைப்பிடம் நிரூபிப்பேன்' என்றார்.


இந்நிலையில், நேற்று நிருபர்களிடம் பேசிய பிரதமர் மன்மோகன் சிங், ""தயாநிதி விவகாரத்தை, சட்ட அமலாக்க அமைப்பைச் சேர்ந்தவர்கள் கவனித்து வருகின்றனர். அவர்கள் நடுநிலையுடன் செயல்பட அனுமதிக்கப்படுவர். ஊழலை எதிர்த்து போராட வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியுடன் உள்ளோம். இருந்தாலும், லஞ்சத்தை ஒரே அடியாக ஒழிக்க, கையில் மந்திரக்கோல் எதுவும் கிடையாது. லோக்பால் அமைப்பின் விசாரணை வரம்பிற்குள் பிரதமரை கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கை தொடர்பாக எதுவும் தெரிவிக்க விரும்பவில்லை. இந்தப் பிரச்னை, மத்திய அரசால் நியமிக்கப்பட்ட கூட்டுக் குழுவின் பரிசீலனையில் உள்ளது என்றார்.


மூலம்[தொகு]