உள்ளடக்கத்துக்குச் செல்

நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை அடுத்து கனடிய சிறுபான்மை அரசு கவிழ்ந்தது

Checked
விக்கிசெய்தி இலிருந்து

சனி, மார்ச்சு 26, 2011

கனடாவில் பழமைவாதக் கட்சி சிறுபான்மை அரசு நேற்று வெள்ளிக்கிழமை எதிர்க்கட்சிகளால் நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானம் வாக்கெடுப்பில் வெற்றி பெற்றதை அடுத்து கவிழ்ந்தது. இதனை அடுத்து அங்கு மே மாதத்தில் பொதுத்தேர்தல்கள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.


பிரதமர் ஸ்டீவன் ஹார்ப்பர்

நம்பிக்கையில்லாத் தீர்மானத்துக்கு எதிராக 156 வாக்குகளும் எதிராக 145 வாக்குகளும் கிடைத்தன. பிரதமர் ஸ்டீவன் ஹார்ப்பர்|ஸ்டீவன் ஹார்ப்பர் அறிமுகப்படுத்திய கடுமையான குற்றவியல் சட்டமூலம், நிறுவன வரி, மற்றும் போர் விமானங்கள் வாங்கியமை போன்ற திட்டங்களின் முழுமையான நிதி விபரங்களை நாடாளுமன்றத்தில் அவர் சமர்ப்பிக்கவில்லை எனக் குற்றம் சாட்டி எதிர்க்கட்சிகள் அரசுக்கெதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக் கொண்டு வந்தன.


மறு தேர்தல் நடத்தப்படும் இடத்தில் பழமைவாதக் கட்சி மீண்டும் அதிக இடங்களைக் கைப்பற்றும் என கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன. ஆனாலும் அரசு அமைப்பதற்குத் தேவையான அறுதிப் பெரும்பான்மை கிடைக்காது என்றே கருதப்படுகிறது. 308 உறுப்பினர்களைக் கொண்ட தற்போதைய நாடாளுமன்றத்தில் 143 உறுப்பினர்களைப் பழமைவாதக் கட்சி கொண்டுள்ளது. ஹார்ப்பர் இம்முறையும் பெரும்பான்மை பெறாவிடின் எதிர்க்கட்சிகள் இணைந்து ஆட்சியமைக்கக்கூடும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.


மே மாதத்தில் இடம்பெறவிருக்கும் தேர்தல் கடந்த 7 ஆண்டுகளில் கனடாவில் நடைபெறும் நான்காவது தேர்தல் ஆகும்.


மூலம்

[தொகு]