நாசாவின் 'கியூரியோசிட்டி' தரையுளவி வெற்றிகரமாக செவ்வாய்க் கோளில் இறங்கியது

விக்கிசெய்தி இலிருந்து

திங்கள், ஆகத்து 6, 2012

அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா தனது புதிய தானியங்கி தரையுளவி ஒன்றை செவ்வாய்க் கோளில் தரையிறக்கியுள்ளது.


ஓவியரின் கைவண்ணத்தில் கியூரியோசிட்டி தரையிறங்குவதைக் காட்டும் படம்
செவ்வாயில் இருந்து கியூரியோசிட்டி அனுப்பிய முதலாவது படம்

கியூரியோசிட்டி (Curiosity) என அழைக்கப்படும் ஒரு தொன் எடையுள்ள இந்தத் தரையுளவி செவ்வாயின் நிலநடுக்கோட்டுப் பகுதியில் உள்ள பள்ளம் ஒன்றில் ஜிஎம்டி நேரம் இன்று காலை 05:32 மணிக்கு தரையிறங்கியது. இத்தளவுளவி குறைந்தது இரண்டு ஆண்டுகளுக்கு செவ்வாயில் தங்கி அங்கு முன்னர் வாழ்ந்திருக்கக்கூடிய உயிரினங்கள் பற்றி ஆராயத் திட்டமிடப்பட்டுள்ளது.


தரையுளவி செவ்வாயில் தரையிறங்கிய சமிக்கை நாசாவின் ஒடிசி செயற்கைக் கோள் வழியாக பூமியை எட்டியதை அடுத்து கலிபோர்னியாவின் பசடேனா நகரில் உள்ள ஜெட் உந்துகை ஆய்வுகூடத்தில் பெரும் கரகோசத்துடன் வரவேற்கப்பட்டது. கியூரியோசிட்டி செவ்வாயில் தரையிறங்கிய முதலாவது படிமங்கள் ஏற்கனவே பூமிக்குக் கிடைத்துள்ளது.


பூமியில் இருந்து 570 மில்லியன் கிமீ தூரப் பயணத்தை கேப் கேனவரல் ஏவுதளத்தில் இருந்து 2011 நவம்பர் 26 ஆம் நாள் ஆரம்பித்த செவ்வாய் அறிவியல் ஆய்வுகூடத் திட்டம் செவ்வாயின் சுற்றுவட்டத்துள் 20,000 கிமீ/மணி வேகத்தில் நுழைந்தது. பின்னர் இத்திட்டத்தின் தாய்க்கலத்தில் இருந்து கியூரியோசிட்டி தரையுளவி 0.6 மீ/செக் மெதுவான வேகத்தில் பாரசூட் மூலம் செவ்வாயில் தரையிறங்கியது.


கியூரியோசிட்டி செவ்வாயில் தரையிறங்கும் நாசாவின் நான்காவது தரையுளவி ஆகும். ஆனாலும் இது ஏனைய திட்டங்களிளை விட மிகப் பெரியதாகும். 1997 ஆம் ஆண்டில் தரையிறங்கிய முதலாவது தரையுளவி நிறியை விட 4 மடங்கு பாரமான பரிசோதனைக் கருவியை கியூரியோசிட்டி கொண்டு சென்றுள்ளது.


தரையுளவி தரையிறங்கிய பள்ளத்தில் உள்ள 5 கிமீ உயர மலை ஒன்றை கியூரியோசிட்டி ஆராயும். மலையில் ஏறும் போது பல பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் திரவ நீரில் உருவாகிய பாறைகளையும், நுண்ணுயிரிகள் வாழ்ந்த சூழ்நிலைகளையும் அது ஆராயும்.


ஆரம்பத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு மட்டுமே இத்தரையுளவி இயங்கக்கூடும் என எதிர்பார்க்கப்பட்டது, ஆனால் தற்போது இது பத்து அல்லது அதற்கு மேலான ஆண்டுகளுக்கும் இயங்கக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.


மூலம்[தொகு]