நாசாவின் செயற்கைக்கோள் கட்டுப்பாட்டை இழந்து பூமியை நோக்கி வருகிறது

விக்கிசெய்தி இலிருந்து

சனி, செப்தெம்பர் 17, 2011

20 வருடங்களாய் பயன்படுத்தப்பட்ட நாசாவின் செயற்கைக்கோள் ஒன்று தரைக்கட்டுப்பாட்டை இழந்ததால் அந்நிறுவனம் அதனை அழிக்க முடிவு செய்துள்ளது.


UARS செயற்கைக்கோள்

அமெரிக்க நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம் கடந்த 1991 ஆம் ஆண்டு 6.5 தொன் எடையுள்ள "மேல் வளிமண்டல ஆய்வுச் செயற்கைக்கோள்" (UARS - Upper Atmosphere Research Satellite) எனப்படும் செயற்கைக்கோளை விண்ணில் ஏவியது. தற்போது அதன் தரைக்கட்டுப்பாடு துண்டிக்கப்பட்டுள்ளதால் செப்டம்பர் 23 அல்லது 24 இல் அது பூமியில் வந்து விழும் என்று தகவல்கள் தெரிகிறது.


பூமியின் வளிமண்டலத்திற்குள் நுழையும் பொழுது கட்டுப்பாட்டை இழந்த செயற்கைக்கோள் பல துண்டுகளாக சிதறி விடும். மத்திய கோட்டுக்கு வடக்கு, தெற்காக 57 பாகை பகுதியில் கொண்ட பூமியின் எப்பகுதியிலும் இது விழக்கூடும் என்று கூறப்பட்டுள்ளது. இவ்வாறு சிதறிய துண்டுகள் பூமியில் மக்கள் வாழும் பகுதியில் அதி வேகத்தில் வந்து விழும். இதனால் மக்களின் பாதுக்காப்பைக் கருதி நாசா அந்த செயற்கைகோளை விண்ணிலேயே அழித்துவிட எண்ணியுள்ளது.


ஆனால் இதனால் பெரும் ஆபத்து நேராது என்றும் நாசா மையத்தினர் கூறியுள்ளனர். 1950 இல் இது போன்று செயற்கைக்கோள் மறுநுழைவு செய்த போது அவ்வளவாக விழிப்புணர்வு இல்லை என்றும், தற்போது இதனை எதிர் கொள்வது முன்பைவிடு சற்று எளிதென்றும் மக்கள் உயிர்களுக்கு பாதிப்பு ஏற்படாத வண்ணம் பார்த்துக் கொள்வோம் என்றும் கூறியுள்ளனர்.


இந்த துகள் தூசிகள் எங்கு வந்து விழுமென்று இன்னும் சரியாக கணிக்க முடியவில்லை. ஆனால் அது சுமார் 500 கிமீ தொலைவிற்கு விரிந்து கீழே கொட்டும் என்று கூறுகின்றனர். அவ்வாறு பூமியில் வந்து விழும் பொருட்களை யாரும் கையில் எடுக்கக்கூடாது என்றும், அவற்றை விற்பனை செய்யக்கூடாது என்றும் நாசா மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.


1979 இல் ஸ்கைலாப் என்ற செயற்கைக்கோள் மேற்கு ஆத்திரேலியாவில் வீழ்ந்த போது, வீழ்ந்த இடங்களைத் துப்பரவு செய்ய அமெரிக்க அரசு ஆத்திரேலிய அரசுக்குப் பணம் செலுத்தியிருந்தது. 1958 ஆம் ஆண்டில் சோவியத்தின் ஸ்புட்னிக் 2 செயற்கைக்கோள் கட்டுப்பாடிழந்து நியூயோர்க்கில் இருந்து அமேசான் வரை 10 நிமிடங்கள் வரை சென்றதைப் பலர் கண்டனர்.


மூலம்[தொகு]