நாடு கடந்த திபெத்திய அரசின் பிரதமராக லோப்சங் சங்கை பதவியேற்பு

விக்கிசெய்தி இலிருந்து

செவ்வாய், ஆகத்து 9, 2011

திபெத்தின் நாடுகடந்த அரசின் புதிய பிரதமராகப் பதவியேற்ற லோப்சங் சங்கை சீனாவின் குடியேற்றவாதத்துக்கு எதிராகப் போராட விருப்பதாக சூளுரைத்தார். பதவியேற்பு விழா நேற்று திங்கட்கிழமை இந்தியாவின் தரம்சாலா நகரில் நாடு கடந்த திபெத் மதகுரு தலைவர் தலாய்லாமா முன்னிலையில் நடந்தது.


நேற்று நடைபெற்ற விழாவில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட திபெத்தியர்கள் கலந்து கொண்டனர். திபெத் மத்திய நிர்வாகத்தின் தலைமை நீதிபதி நக்வாங்-பெஹல்ஜியால் புதிய பிரதமர் லோப்சங் சங்கைக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.


இப்பதவியேற்பு முடிந்த பின்னர் தலாய்லாமா‌ தொடர்ந்து மீண்டும் மதகுருவாக செயல்படுவார் என திபெத்திய அரசு நிர்வாகம் தெரிவித்தது.


கடந்த ஏப்ரல் மாதத்தில் இடம்பெற்ற தேர்தலில் சங்கை (அகவை 43) வெற்றி பெற்று புதிய பிரதமரானார். இவர் டார்ஜிலிங் நகரில் பிறந்தவர். டில்லியில் பள்ளி, கல்லூரிப் படிப்பை முடித்தார். ஹார்வர்ட் சட்டப் பல்கலைக்கழகத்தில் படித்தவர்.


சீன ஆட்சியில் திபெத்தியர்களின் உரிமைகளுக்காகக் குரல் கொடுப்பது, நாடு கடந்த அரசை நிருவகிப்பது போன்றவை லோப்சங் சகையின் பணிகளாக இருக்கும்.


திபெத்திய நாடு கடந்த அரசை இதுவரை எந்த ஒரு நாடும் அங்கீகரிக்காதது, மற்றும் தனது தாய்நாட்டை என்றுமே பார்த்தறியாத ஒருவர் தலைவராக இருப்பது போன்றவை இவர் எதிர்கொள்ளும் முக்கிய சவால்களாகும் என அவதானிகள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.


தொடர்புள்ள செய்திகள்[தொகு]

மூலம்[தொகு]