நியண்டர்தால் மனிதனின் அழிவு குறித்து அறிவியலாளர்கள் விளக்கம்

விக்கிசெய்தி இலிருந்து

செவ்வாய், பெப்பிரவரி 28, 2012

நவீன கால மனிதன் தோன்றுவதற்கு பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னரே ஐரோப்பாவில் நியண்டர்தால் மனிதர் அழிய ஆரம்பித்து விட்டதாக புதிய டிஎன்ஏ ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மேற்கு ஐரோப்பாவில் வாழ்ந்த பெரும்பாலான நியண்டர்தால்கள் 50,000 ஆண்டுகளுக்கு முன்னரேயே அழிந்து விட்டனர்.


நியண்டர்தால் மனிதன்

இதன் பின்னர் நியண்டர்தால்களின் சிறிய கூட்டம் ஒன்று ஐரோப்பாவின் மத்திய மற்றும் மேற்குப் பகுதிகளில் குடியேறி 10,000 ஆண்டுகள் வரை வாழ்ந்திருக்கின்றனர். இது பற்றிய ஆய்வுக் கட்டுரை ஒன்று மூலக்கூற்று உயிரியல் மற்றும் கூர்ப்பு இதழில் வெளியிடப்பட்டுள்ளது.


13 நியண்டர்தால்களின் எலும்புகளில் இருந்து பெறப்பட்ட டிஎன்ஏ மூலம் சுவீடன் மற்றும் எசுப்பானிய ஆய்வாளர்கள் குழு இந்த முடிவுக்கு வந்துள்ளது. ஐரோப்பா, மற்றும் ஆசியாவில் கண்டுபிடிக்கப்பட்ட 100,000 முதல் 35,000 ஆண்டுகள் காலப்பகுதியைச் சேர்ந்தவை எனக் கருதப்படும் எச்சங்களில் இருந்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. மேற்கு ஐரோப்பாவைச் சேர்ந்த 48,000 ஆண்டுகள் பழமையான எச்சங்களில் ஆசிய எச்சங்கலும் பார்க்க குறிப்பிடத்தக்க அளவு பிறப்புரிமை வேறுபாடுகள் காணப்பட்டன. ஆனால், 48,000 ஆண்டுகளிலும் குறைந்த வயது எச்சங்களில் இந்த வேறுபாடு குறைந்து காணப்பட்டது.


காலநிலை மாற்றம் போன்ற இயற்கைக் காரணிகளால் மேற்கு ஐரோப்பாவில் இருந்த நியண்டர்தால்கள் 50,000 ஆண்டுகளுக்கு முன்னர் அழிந்திருக்கலாம் என அறிவியலாளர்கள் கருதுகின்றனர். வெப்பமான தெற்குப் பகுதியில் இவர்களின் அழிவு பின்னர் ஏற்பட்டிருக்கலாம்.


தெற்கு எசுப்பானியாவில் நெர்ச்சா என்ற இடத்தில் உள்ள குகைகளில் அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட ஓவியங்கள் சில 42,000 ஆண்டுகள் பழமையானது என அறிவியலாளர்கள் கருதுகின்றனர். இவை நியண்டர்தால்களினால் உருவாக்கப்பட்டவை எனக் கூறப்பட்டாலும் இக்கூற்று உறுதிப்படுத்தப்படவில்லை.


நியண்டர்தால் (Neanderthal) மனிதர் ஐரோப்பாவிலும் மேற்கு ஆசியாவின் சில பகுதிகளிலும் வாழ்ந்திருந்த ஹோமோ வகை இனமாகும். இவற்றின் எச்சங்கள் செருமனியின் நியண்டர்தால் என்னும் பிரதேசத்தில் கண்டுபிடிக்கப்பட்டதால் இப்பெயரால் அழைக்கப்படுகிறான். இவன் சமைத்த தாவர உணவை உண்டதாக அவர்களின் எச்சங்களை ஆராய்ந்த வரலாற்றாளர்கள் தெரிவித்துள்ளனர்.


மூலம்[தொகு]