உள்ளடக்கத்துக்குச் செல்

நீண்ட தூர ஏவுகணைகளை ஈரான் பரிசோதித்தது

Checked
விக்கிசெய்தி இலிருந்து

செவ்வாய், சனவரி 3, 2012

தரையில் இருந்து கடலில் உள்ள போர்க் கப்பலைத் தாக்கும் இரு தொலைதூர ஏவுகணைகளை, நேற்று வெற்றிகரமாக பரிசோதித்துள்ளதாக ஈரான் அறிவித்துள்ளது. எண்ணெய் வளம் நிறைந்த ஹார்மோஸ் பகுதியில் கடந்த சில நாள்களாக ஈரான் ராணுவம் போர் ஒத்திகையில் ஈடுபட்டது. கடைசி நாளான திங்கட்கிழமை 200 கி.மீட்டர் தொலைவு வரை பாய்ந்து தாக்கும் 2 ஏவுகணைகள் சோதனை செய்யப்பட்டன.


தரையில் இருந்து கடலை நோக்கிச் செல்லும் காடர் குரூஸ் ஏவுகணை, தரையில் இருந்து தரைக்குப் பாயும் நூர் எனப்படும் நீண்ட தூர ஏவுகணை, தரையில் இருந்து வான் நோக்கிச் செல்லும் நடுத்தர ஏவுகணை ஆகியவற்றை ஈரான் வெற்றிகரமாகச் சோதித்துள்ளதாக அரசு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.


ஏவுகணை சோதனைக்குப் பின் உயர் அதிகாரியொருவர் கருத்துத் தெரிவிக்கையில் 'இந்த ஏவுகணை, நவீன தொழில்நுட்பத்துடன் கூடியது. அதோடு, ராடாரின் கண்காணிப்பில் சிக்காத இலக்குகளையும், இந்த ஏவுகணை தாக்கக் கூடிய வல்லமை படைத்தது’ என்றார். மேலும், முதன் முதலாக உள்நாட்டில் வடிவடைக்கப்பட்ட, நவீன தொழில் நுட்பத்தோடு கூடிய ஏவுகணை ஒன்று பரிசோதிக்கப்பட்டது இதுவே முதன் முறையாகும்.


இந்நிலையில், அணுமின் நிலையங்களில் மின்சார உற்பத்திக்காக பயன்படுத்தப்படும் யுரேனியம் அடங்கிய எரிபொருள் கம்பிகள் தயாரிக்கப்பட்டு, வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டதாகவும் ஈரானிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. அணுஆயுத விவகாரம் தொடர்பாக ஈரான் மீது ஐ.நா. சபை பல்வேறு பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக ஈரான் மீது அமெரிக்க நேசப் படைகள் தாக்குதல் நடத்தக் கூடும் என்றும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

மூலம்

[தொகு]