உள்ளடக்கத்துக்குச் செல்

நேட்டோ வான் தாக்குதலில் லிபிய இராணுவப் பேச்சாளர் கொல்லப்பட்டார்

விக்கிசெய்தி இலிருந்து

திங்கள், மே 16, 2011


லிபியத் தலைநகர் திரிப்பொலியில் அமைந்திருக்கும் உளவுத்துரை தலைமையகம் மீது நேற்று ஞாயிற்றுக்கிழமை நேட்டோ வான்தாக்குதல் நடத்தியதில் லிபியத் தலைவர் முஆம்மர் கடாபியின் இராணுவப் பேச்சாளர் கேணல் மிலாட் உசைன் அல்-பிக்கி என்பவர் கொல்லப்பட்டதாக அல் அராபியா தொலைக்காட்சி அறிவித்துள்ளது.


"சாவியா நகரில் இடம்பெற்ற வன்முறைகளுக்கு கேணல் பிக்கியே காரணம் என நம்பப்படுகிறது," என எதிரணிகளை மேற்கோள் காட்டி அல் அராபியா தெரிவித்துள்ளது.


ஞாயிற்றுக்கிழமை நேட்டோவின் வான் தாக்குதலில் பொதுமக்கள் பலர் கொல்லப்பட்டதாக லிபிய அரசு செய்தி நிறுவனம் தெரிவித்தது. ஆனால் அது மேலதிக தகவல் எதனையும் தரவில்லை.


கடாபியின் 40-ஆண்டுகால ஆட்சிக்கெதிராக கடந்த பெப்ரவரி மாதத்தில் தொடங்கிய கிளர்ச்சியில் ஆயிரக்கணக்கானோர் இறந்துள்ளனர். லிபியா மீது நேட்டோ படைகள் மார்ச் 31 இல் வான் தாக்குதல்களை ஆரம்பித்ததில் இருந்து இதுவரை நேட்டோவின் போர் வானூர்திகள் மொத்தம் 6,661 தாக்குதல்களை மேற்கொண்டுள்ளன.


ஆனாலும் பல போர் முனைகளில் எதிரணிகளுக்கும் கடாபியின் படைகளுக்கும் இடையில் சண்டைகள் இடை நிறுத்தப்பட்டுள்ளன.


ஐக்கிய இராச்சியத்தின் பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் டேவிட் ரிச்சார்ட்ஸ் சண்டே டெலிகிராஃப் செய்தியாளருக்கு வழங்கிய நேர்காணலில், கடாபியின் படைகளுக்கு எதிராக நேட்டோ தனது வான் தாக்குதலை அதிகரிக்க வேண்டும் எனக் கூறியிருந்தார்.


மூலம்

[தொகு]