நேப்பாளத்தின் புதிய பிரதமராக பாபுராம் பட்டாராய் பதவியேற்பு

விக்கிசெய்தி இலிருந்து

திங்கள், ஆகத்து 29, 2011

நேப்பாளத்தின் முன்னாள் மாவோயிசப் பிரதித் தலைவர் பாபுராம் பட்டாராய் அந்நாட்டின் புதிய பிரதமராக இன்று பதவியேற்றார். நாட்டில் நீண்ட காலம் இழுபறியில் இருக்கும் அமைதிப் பேச்சுவார்த்தைகளை அடுத்த ஆறு மாதத்துக்குள் சுமூகமாகத் தீர்த்து வைக்கவிருப்பதாக அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.


புதிய பிரதமர் பாபுராம் பட்டாராய்

நேபாள கம்யுனிஸ்ட் (மாவோயிஸ்ட்) கட்சியைச் சேர்ந்த பாபுராம் பட்டாராய் நேற்று ஞாயிற்றுக்கிழமை நாடாளுமன்றறத்தில் இடம்பெற்ற வாக்கெடுப்பில் சிறிய கட்சிகளின் உதவியுடன் பெரும்பான்மைப் பலத்தைப் பெற்று வெற்றி பெற்று நேப்பாளத்தின் 35வது பிரதரானார். சனாதிபதி ராம்பரன் யாதவ் இவருக்கு பதவிப்பிரமானம் செய்து வைத்தார். கூட்டணியின் தலைவரான விஜய காச்செடார் என்பவரை அவர் பிரதிப் பிரதமராகவும் உட்துறை அமைச்சராகவும் தேர்ந்தெடுத்தார். ஏனைய அமைச்சர் பதவிகளுக்கு பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.


புதுதில்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்ற 56 வயது பட்டாராய், மாவோயிசக் கிளர்ச்சியின் போது தலைமறைவாக வாழ்ந்து வந்தார். ஆனாலும் மாவோயிசப் போராளிகளுக்கு இவரே முக்கிய வழிகாட்டியாக இருந்து வந்துள்ளதாக நம்பப்படுகிறது.


2006 ஆம் ஆண்டில் மாவோயிசக் கிளர்ச்சி ஆரம்பித்ததில் இருந்து நேப்பாள அரசியலில் குழப்பநிலை நீடித்து வருகிறது. நாடாளுமன்றத்தில் மாவோயிஸ்டுகள் பெரும்பான்மையாக இருந்தாலும், நேப்பாள இராணுவத்தில் சேர்க்கப்படவிருந்த மாவோயிசப் போராளிகளின் எண்ணிக்கையில் ஆட்சியில் இருந்த கூட்டணிக் கட்சிகளிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதைத் தொடர்ந்து அவர்கள் 2009 ஆம் ஆண்டில் ஆட்சியில் இருந்து அகன்றனர். அன்றில் இருந்து நேபாளத்தில் ஒரு திரமான ஆட்சி இருக்கவில்லை.


முன்னாள் மாவோயிசப் போராளிகள் 19,000 பேர் இன்னும் இராணுவத்தில் இணைக்கப்படாமல் உள்ளனர். இப்பிரச்சினை குறித்து அடுத்த சில மாதங்களில் தீர்வு ஒன்று எட்டப்படும் என பட்டாராய் நம்பிக்கை தெரிவித்தார்.


தொடர்புள்ள செய்திகள்[தொகு]

மூலம்[தொகு]