பங்கு மோசடி வழக்கில் ராஜரத்தினம் குற்றவாளியாகக் காணப்பட்டார்

விக்கிசெய்தி இல் இருந்து
Jump to navigation Jump to search

வியாழன், மே 12, 2011

அமெரிக்காவின் முன்னாள் கோடீசுவரர் ராஜ் ராஜரத்தினம் உட்தகவல் பங்குச் சந்தை மோசடியில் ஈடுபட்ட வழக்கில் நேற்று புதன்கிழமை அமெரிக்காவின் மான்ஹட்டன் நகரில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார்.


ராஜரத்தினத்துக்கு எதிராக எதிராக முன்வைக்கப்பட்ட 14 குற்றச்சாட்டுகளும் நிரூபிக்கப்பட்டுள்ளதாகவும் பதினைந்தரை தொடக்கம் பத்தொன்பதரை வருடங்கள் வரையில் சிறைத் தண்டனை விதிக்கப்படலாம் எனவும் வழக்குத் தொடுநர்கள் தெரிவித்துள்ளனர். தீர்ப்பு எதிர்வரும் ஜுலை மாதம் 29ம் திகதி வெளியிடப்படும் என்று அமெரிக்க மான்ஹட்டன் நீதிமன்ற மாவட்ட நீதிபதி ரிச்சட் ஹொல்வெல் தெரிவித்துள்ளார். பங்கு வணிகத்தில் 60 மில்லியன் அமெரிக்க டாலர்கள் நட்டத்தை தவிர்ப்பதற்காக உட்சந்தை மோசடியில் ஈடுபட்டு இலாபம் உழைத்ததாக குற்றம் சுமத்தப்பட்டது.


இலங்கையைப் பிறப்பிடமாகக் கொண்ட ராஜரத்தினம், உலகின் செல்வந்தர்களின் பட்டியலில் 236ம் இடத்தில் இருந்தார். 2009 அக்டோபர் 16 ஆம் நாள் அமெரிக்க மத்திய புலனாய்வுத் துறையினரால் கைது செய்யப்பட்டார். பங்கு சந்தை மோசடி தொடர்பில் 14 குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.


உலகப் பங்குச் சந்தைகளில் உட்தகவல் பெற்று, அதன் அடிப்படையில் வணிகம் செய்வது சட்டப்படி குற்றம் ஆகும். அவை தொடர்பில், ராஜரத்தினத்தின் தொலைபேசி உரையாடல்கள் உள்ளிட்ட பல்வேறு ஆதாரங்கள் முன்வைக்கப்பட்டு, நேற்றைய தினம் குற்றங்கள் நிரூபிக்கப்பட்டன. ராஜரத்தினம் நாட்டை விட்டு வெளியேறாமல் இருப்பதற்காக அவரது வீட்டைக் கண்காணிக்கும் படியும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.


இதேவேளை தமக்கு எதிரான தீர்ப்பை ஆட்சேபித்து ராஜரத்தினம் மேன்முறையீடு செய்யவிருப்பதாக அவரது வழக்கறிஞர் ஜோன் டவுட் தெரிவித்தார்.


ராஜரத்தினத்துக்கு எதிரான வழக்கை முன்ன் நின்று நடத்திய புலனாய்வுத்துறை முகவர் பி. ஜே. காங், தீர்ப்புக் குறித்து மகிழ்ச்சி தெரிவித்தார்.


தொடர்புள்ள செய்திகள்[தொகு]

மூலம்[தொகு]

Bookmark-new.svg