உள்ளடக்கத்துக்குச் செல்

பணம் திசை திருப்பப்பட்டதை வங்காளதேசத்தின் கிராமின் வங்கி மறுக்கிறது

விக்கிசெய்தி இலிருந்து

ஞாயிறு, திசம்பர் 5, 2010

தனது நிறுவனம் நிவாரணத்துக்கு கொடுக்கப்பட்ட 100 மில்லியன் அமெரிக்க டாலர் பணத்தை வேறொரு நிறுவனத்துக்குத் திசைதிருப்பியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுக்களை வங்காளதேசத்தின் சிறுகடன்கள் வழங்குவதில் முன்னோடி நிறுவனமான கிராமின் வங்கி மறுத்துள்ளது.


கிராமின் வங்கி நிறுவனர் பேராசிரியர் முகமது யூனுஸ்

நோர்வே, சுவீடன், மற்றும் செருமனியில் இருந்து கிராமின் வங்கிக்கு கொடுக்கப்பட்ட பணம் குறித்த விவரங்களை நோர்வே ஆராய்ந்து வருவதாக வெளிவந்த செய்திகளை அடுத்து கிராமின் வங்கி இந்த மறுப்பை வெளியிட்டுள்ளது. இக்குற்றச்சாட்டுக்கள் சோடிக்கப்பட்டவை என்றும் இதற்கு எவ்வித ஆதாரமும் இல்லை என வங்கி அறிவித்துள்ளது.


நோர்வே அரசுத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட ஆவணப் படம் ஒன்றில் கிராமின் வங்கியில் இருந்து அந்நிறுவனத்துக்குச் சொந்தமான வேறொரு அமைப்புக்கு பணம் திசை திருப்பட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டது.


வறிய மக்களுக்கு சிறுகடன் வழங்குவதற்காக கிராமின் வங்கியை நோபல் பரிசு பெற்ற பேராசிரியர் முகமது யூனுஸ் ஆரம்பித்தார்.


பேராசிரியர் யூனுசும் அவரது பங்காளர்களும் கிராமின் கல்யாண் என்ற அவர்களது வேறொரு கம்பனிக்கு 100 மில்லியன் டாலர்களை வழங்கியிருப்பதாக டென்மார்க்கின் ஆவணப் படத் தயாரிப்பாளர் டொம் ஹைன்மன் என்பவர் கூறியுள்ளார். கிராமின் கல்யாண் என்பது சிறுகடன் வழங்கும் ஒரு நிறுவனம் அல்ல எனத் தெரிவிக்கப்படுகிறது.


நோர்வேயின் அதிகாரிகள் இது குறித்த தமது ஆட்சேபங்களை கிராமின் வங்கியாளர்களுக்குத் தெரிவித்தவுடன் அப்பணத்தில் ஒரு பகுதியான 30 மில்லியன் டாலர்கள் கிராமின் வங்கி திரும்பப்பெற்றதாக ஆவணப் படம் தெரிவிக்கிறது. ”சிறுகடனில் கைப்பற்றப்பட்டது” என்ற தலைப்பில் இந்த ஆவணப் படம் வெளியிடப்பட்டுள்ளது.


இப்பணம் கையாடல் தொடர்பில் தாம் பேராசிரியர் யூனுசை குற்றம் சாட்டவில்லை என்று ஹைன்மன் பிபிசி செய்தியளரிடம் தெரிவித்தார்.


நோர்வேயின் நொராட் என்ற நிவாரண நிறுவனம் வழங்கிய பணம் முழுவதையும் கிராமின் வங்கி திரும்பப்பெற்று விட்டது என்று அந்த வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.


பேராசிரியர் யூனுஸ் தலைமை தாங்கும் கிராமின் குழுமம் கிட்டத்தட்ட 30 நிறுவனங்களை நடத்தி வருகிறது. கிராமின் வங்கியில் ஊழல் நடந்திருக்கும் எனத் தாம் நம்பவில்லை என்று நோர்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆனாலும், “கொடுக்கப்பட்ட நிவாரணப் பணம் வேறு வகைகளில் பயன்படுத்தப்பட்டிருப்பது எம்மால் ஏற்றுக் கொள்ள முடியாது,” என்று நோர்வே அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்தார்.


வறிய மக்களின் சமூக பொருளாதார முன்னேற்றதிற்காக முன்னின்று உழைத்தமைக்காக கிராமின் வங்கிக்கும், அதன் நிறுவனர் யூனுசிற்கும் 2006ம் ஆண்டிற்கான அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.


மூலம்[தொகு]