பதின்ம வயதுக் கர்ப்பிணிகளுக்கு மலேசியாவில் பள்ளி
செவ்வாய், செப்டெம்பர் 21, 2010
- 17 பெப்ரவரி 2025: மலேசிய விமான விபத்து: 296 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன
- 17 பெப்ரவரி 2025: மலேசிய விமானம் உக்ரைன் வான்பரப்பில் சுட்டு வீழ்த்தப்பட்டது, 298 பேர் உயிரிழப்பு
- 17 பெப்ரவரி 2025: மலேசிய போயிங் 777 வகை விமானம் விபத்துக்குள்ளான போது தானாக இயங்கியுள்ளது
- 17 பெப்ரவரி 2025: காணாமல் போன விமானத்தைத் தேடும் முயற்சிகளை கைவிடமாட்டோம்: மலேசியா அறிவிப்பு
- 17 பெப்ரவரி 2025: மலேசிய விமானம் தெற்கிந்தியப் பெருங்கடலில் வீழ்ந்து விட்டதாக மலேசியா அறிவிப்பு
தவறான உறவுகளால் பிறக்கும் குழந்தைகள் கைவிடப்படுவதைக் குறைக்கும் நோக்கோடு பதின்ம வயதுக் கர்பிணிகளுக்கென சிறப்புப் பள்ளிக்கூடம் ஒன்று முஸ்லிம்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட மலேசியாவில் முதற் தடவையாகக் கோலாகலமாகத் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
மலேசியாவின் தெற்கு மாநிலமான மலாக்காவில் ஜாசின் நகரில் இப்பள்ளி திறக்கப்பட்டது. இசுலாமிய சமய விவகார அதிகாரி இது குறித்து பேசும்போது, வயிற்றில் கருவை சுமந்தாலும் இவர்களின் கல்வி பாதிக்கக்கூடாது என்ற எண்ணத்தில் தான் இந்த பள்ளி நிறுவப்பட்டிருக்கிறது என்று தெரிவித்தார்.
இப்பள்ளிகளில் பயிலும் கர்ப்பிணிகளுக்கு முறையான கல்வியுடன் தினமும் மருத்துவச் சோதனை, மற்றும் சமயக் கலந்தாய்வு போன்றவையும் வழங்கப்படும். இங்கு பயிலும் பெண்களின் தகவல்கள் அனைத்தும் இரகசியமாகப் பேணப்படும் என பள்ளி நிர்வாகம் அறிவித்துள்ளது.
இதற்கிடையில் கடந்த வாரம் வரை இந்தப் பள்ளியில் யாரும் சேரவில்லை என்று ஒரு வருத்தமான அறிக்கையை மலாக்கா மாநில முதலமைச்சர் டத்தோசிறீ முகமது அலி ருஸ்தாம் வெளியிட்டிருக்கிறார்.
அத்துடன் கர்ப்பிணிகளுக்கான இப்பள்ளித் திட்டத்திற்கு மலேசியாவின் பெண்களுக்கான அமைச்சர் தனது எதிர்ப்பைத் தெரிவித்தார். அடிப்படைப் பிரச்சினை மாணவர்களுக்கு அடிப்படைப் பாலியல் கல்வி வழங்கப்படாததே என்றார் அமைச்சர்.
தவறான உறவுகளினால் கருவுறும் இளம் பெண்களுக்கென்று ஒரு பள்ளி உருவாகியுள்ளது தவறான செயல்களுக்கு மறைமுகமான ஆதரவைத் தருவது போல ஆகாதா என்று சில கட்டொழுங்கு ஆசிரியர்கள் கருதுகிறார்கள். இளம் பெண்களுக்கு இந்த நிலை வராமல் தடுப்பது எவ்வாறு என்று சிந்தித்து ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை அரசாங்கம் எடுத்தால் நல்லது என அவர்கள் கூறுகிறார்கள்.
இவ்வாண்டு மட்டும் மலேசியாவில் 70 குழந்தைகள் வீட்டு வாசல்களிலும், பொது மலசல கூடங்களிலும், கைவிடப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
மூலம்
[தொகு]- School for pregnant teenagers opens in Malaysia, பிபிசி, செப்டம்பர் 17, 2010
- இளம் கர்ப்பவதிகளுக்கு ஒரு பள்ளி, வணக்கம் மலேசியா, செப்டம்பர் 20, 2010
