பன்னாட்டு ஒருநாள் துடுப்பாட்டப் போட்டியில் வீரேந்தர் சேவாக் உலக சாதனை

விக்கிசெய்தி இல் இருந்து
Jump to navigation Jump to search

வெள்ளி, திசம்பர் 9, 2011

இந்தியத் துடுப்பாட்ட வீரர் வீரேந்தர் சேவாக் ஒரு நாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் அதிக அளவு ஓட்டங்களை எடுத்து உலக சாதனை ஒன்றைப் படைத்துள்ளார். மேற்கிந்திய அணிக்கு எதிரான நான்காவது ஒருநாள் போட்டி இந்தூரில் நேற்று நடைபெற்ற போதே சேவாக் 219 ஓட்டங்களைப் பெற்று ஒருநாள் துடுப்பாட்டப் போட்டி வரலாற்றில் அதிக ஓட்டங்கள் பெற்ற வீரர்கள் வரிசையில் முதல் இடம் பிடித்து சாதனை படைத்தார்.


வீரேந்தர் சேவாக்

இதற்கு முன்னர் ஒரு நாள் பன்னாட்டு துடுப்பாட்டப் போட்டிகளில் அதிக ஓட்டங்களைப் பெற்றிருந்த சச்சின் டெண்டுல்கரின் சாதனையை சேவாக் முறியடித்துள்ளார். கடந்த ஆண்டு தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக இதே மத்தியப் பிரதேச மாநிலத்திலுள்ள குவாலியர் மைதானத்தில் 200 ஓட்டங்களை பெற்று டெண்டுல்கர் ஆட்டமிழக்காமல் இருந்தார். இதன் மூலம் ஒருநாள் வரலாற்றில் இரட்டைச் சதம் பெற்ற இரண்டாவது வீரராகவும் சேவாக் வரலாறு படைத்தார்.


அணித் தலைவராக களம் இறங்கி ஓட்டங்களைக் குவித்த சேவாக், 149 பந்துகளில் 25 எல்லைகள், 7 சிக்சர்கள் அடங்கலாக 219 ஓட்டங்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். எனினும் சேவாக் 170 ஓட்டங்கள் எடுத்திருந்த போது, மேற்கிந்திய தீவுகள் அணியின் தலைவர் டாரன் சாமி அவரை ஆட்டமிழக்கச் செய்யக் கூடிய ஒரு சுலபமான வாய்ப்பைத் தவறவிட்டார்.


இதற்கு முன்னர் சேவாக் விளையாடியுள்ள 239 ஒரு நாள் போட்டிகளில், ஒன்றில் அவர் எடுத்திருந்த அதிக பட்சமான ஓட்டங்கள் 175. இது உலக கோப்பை தொடரில் வங்காளதேசத்திற்கு எதிராக எடுத்த ஓட்டங்களாகும்.


இப்போட்டியில் இந்திய அணி 50 ஓவர்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து 418 ஓட்டங்களை குவித்தது. இதன் மூலம் ஒருநாள் அரங்கில் நான்காவது அதிகூடிய ஓட்டங்களை இந்திய அணி பதிவு செய்து கொண்டது. இறுதியில் இந்தியா 153 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.


மூலம்[தொகு]

Bookmark-new.svg