பரமக்குடியில் தலித் மக்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் துப்பாக்கிச் சூடு, 7 பேர் உயிரிழப்பு

விக்கிசெய்தி இலிருந்து

திங்கள், செப்தெம்பர் 12, 2011

தமிழ்நாட்டில் பரமக்குடி ஐந்து முனைச் சாலையில், தலித் மக்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே நேற்று ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட மோதலில், காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஏழு பேர் கொல்லப்பட்டனர்.


ஆர்ப்பாட்டக்காரர்கள் சாலைகளை வழிமறித்துப் பல அரச வாகனங்களை எரித்துச் சேதப்படுத்தினர். தற்பாதுகாப்புக்காகவே காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக தமிழக முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.


மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் ஜான் பாண்டியனை விடுதலை செய்யக்கோரியே மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். தலித் தலைவர் இம்மானுவே சேகரனின் 54வது நினைவு நாளில் கலந்து கொள்வதற்காக பரமக்குடிக்குச் செல்லும் வழியில் ஜான் பாண்டியன் கைது செய்யப்பட்டிருந்தார். ஜான் பாண்டியன் விழாவில் கலந்து கொண்டால் மேலும் கலவரங்கள் வெடிக்கலாம் என அஞ்சியே முன்கூட்டியே அவரைக் கைது செய்ததாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். ஆனாலும், அவரது கைதினால் ஏற்பட்ட கலவரத்தில் காவல்துறையினர் உட்பட 75 பேர் வரை காயமடைந்தனர்.


கலவரத்தின் போது காவல்துறையினர் மீது கற்களும் கம்புகளும் எறியப்பட்டதை அடுத்து, அவர்களைக் கலைக்க கண்ணீர் புகைக்குண்டுகளை வீசியும், தண்ணீரையும் காவல்துறையினர் பீய்ச்சி அடித்துள்ளனர். தீ வைக்கப்பட்ட காவல்துறை வாகனம் ஒன்றின் தீயை அணைக்க வந்த தீயணைப்பு வாகனத்துக்கும் ஆர்ப்பாட்டக்காரர்கள் தீயிட்டுக் கொளுத்தினர். கலவரக்காரர்களை கலவரக்காரர்களைக் கலைக்க காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 5 பேர் அவ்விடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் இருவர் மருத்துவமனையில் உயிரிந்ந்தனர்.


கடந்த சனிக்கிழமை தலித் மாணவர் ஒருவர் ஒரு கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்டதே இந்த மோதல்களுக்கு அடிப்படை காரணம் என்றும் கூறப்படுகிறது.


இதற்கிடையில், பரமக்‍குடி சம்பவம் குறித்து விசாரணை செய்ய, ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணைக்குழு அமைக்கப்படும் என்று சட்டப்பேரவையில் முதல்வர் ஜெயலலிதா இன்று அறிவித்தார்.


மூலம்[தொகு]