உள்ளடக்கத்துக்குச் செல்

பழனிமலையில் நிலச்சரிவு, பக்தர்களுக்குப் பாதிப்பில்லை

விக்கிசெய்தி இலிருந்து

திங்கள், அக்டோபர் 17, 2011

தமிழ்நாடு, பழனியில் உள்ள தண்டாயுதபாணி கோவில் அமைந்திருக்கும் குன்றில் யானைவழிப் பாதையில் பலத்த மழையின் காரணமாக நேற்று ஞாயிறன்று நிலச்சரிவு ஏற்பட்டது. இருப்பினும் எவரும் காயமடையவில்லை.


பழனியிலும் அதன் சுற்றுவட்டாரங்களிலும் கடந்த சனி முதல் பெரும் காற்றுடன் கூடிய மழை பெய்துள்ளது. பழனி நகரில் மட்டும் ஞாயிற்றுக்கிழமைக்கு முந்தைய 24 மணி நேரத்தில் 7 செமீ மழை பெய்துள்ளது. இங்குள்ள வர்தமான் அணையின் நீர்மட்டம் 58அடியாக உள்ளது.


பழனிமலையில் உள்ள தண்டபாணி கோவிலுக்கு கோவில் யானைகள் செல்லும் விதமாக படிகள் இல்லாத வழி அமைக்கப்பட்டுள்ளது. பிற பாதைகள் கட்டமைக்கப்படுவதற்கு முன்னரே இது கட்டப்பட்டது. நேற்று பெய்த பலத்த மழையினால் இப்பாதையில் வள்ளிசுனை என்ற ஊற்று இருக்குமிடத்திற்கு அருகே இந்த நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. மலை மேலிருந்து வழிந்த நீரும் ஊற்று நிரும் பாய்கையில் பாதையின் மேலுள்ள மணல் மற்றும் ஜல்லிக்கற்களைப் புரட்டி இந்த நிலச்சரிவை ஏற்படுத்தியது. இருப்பினும் பக்தர்களுக்கும் பிறருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. நேற்று கார்த்திகை விரதம் என்பதால் பக்தர்கள் பெரும் எண்ணிக்கையில் கூடியிருந்தனர்.


எதிர்வரும் கந்தசட்டி விழாவினை ஒட்டி பெருந்திரளான பக்தர் கூட்டத்தை எதிர்நோக்கியுள்ள நிலையில் இந்த நிலச்சரிவு கோவில் நிர்வாகத்தைக் கவலை கொள்ளச் செய்துள்ளது. நிலச்சரிவு காரணமாக பாதிக்கப்பட்ட பகுதிகளை சீர் செய்ய 2 நாட்கள் ஆகும் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


மூலம்

[தொகு]