உள்ளடக்கத்துக்குச் செல்

பழைய 'ஒப்போர்ச்சுனிட்டி தரையுளவி' செவ்வாயில் களிமண் பாறையைக் கண்டுபிடித்தது

Checked
விக்கிசெய்தி இலிருந்து

திங்கள், சூன் 10, 2013

நாசாவினால் 2003 ஆம் ஆண்டில் ஏவப்பட்ட ஒப்போர்ச்சுனிட்டி என்ற தரையுளவி செவ்வாயில் பாறை ஒன்றைக் கண்டுபிடித்துள்ளது. இது களிமண் கனிமங்கள் நிறைந்த பாறை என அறிவியலாளர்களால் நம்பப்படுகிறது.


ஒப்போர்ச்சுனிட்டி செவ்வாயில் கண்டறிந்த எஸ்பரான்சு பாறை (பெப்ரவரி 23, 2013).

எஸ்பரான்சு எனப் பெயரிடப்பட்டுள்ள இப்பாறையில் அடையாளம் காணப்பட்டுள்ள கனிமங்கள் மூலம், இப்பாறை கடந்த காலத்தில் நீருடன் நீண்ட காலம் தொடர்பில் இருந்ததை உறுதிப்படுத்தக்கூடியதாக உள்ளது.


"2004 ஆம் ஆண்டில் இத்தரையுளவி செவ்வாயில் இறங்கிய காலம் முதல் அங்கு நீர் இருந்ததற்கான ஆதாரங்கள் நமக்குக் கிடைக்கப்பட்டுள்ளன. ஆனாலும், இதுவரைக் காலமும் நமக்குக் கிடைத்த பெருமளவு ஆதாரங்கள் பிஎச் அளவு மிகக் குறைந்ததாகவே இருந்தன. அதாவது அவை அமிலத்தன்மையானவை. சல்பூரிக் அமிலம் இருப்பதற்கான ஆதாரங்களே பெருமளவு கிடைத்துள்ளன. ஆனால், தற்போது கிடைத்துள்ள களிமண் வகை நடுநிலை பிஎச் உடன் உள்ளன. இது தூய நீருக்கான ஆதாரம் ஆகும்," என ஒப்போர்ச்சுனிட்டி தரையுளவியின் நாசா ஒருங்கிணைப்பாளர் நியூயோர்க் கோர்னெல் பல்கலைக்கழகப் பேராசிரியர் ஸ்டீவ் ஸ்குயிரசு தெரிவித்தார்.


எஸ்பரான்சு பாறையில் பெருமளவு அலுமீனியம் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. இந்த அலுமீனியம் மொண்ட்மொரொலொனைட்டு (montmorillonite) வகை என நம்பப்படுகிறது. ஆனாலும் இது உறுதிப்படுத்தப்பட வேண்டியுள்ளது. ஒப்போச்சுனிட்டி தற்போது தனது எதிர்பார்க்கப்பட்ட வாழ்வுக் காலத்தை விட அதிகமாகவே இயங்கி வருகிறது. சனவரி 2004 இல் செவ்வாயில் தரையிறங்கிய இதன் வாழ்வுக்காலம் அப்போது 90 செவ்வாய் வேலை நாட்களே எனக் கணக்கிடப்பட்டது. ஆனால், தற்போது அது 3,300 வேலை நாட்களைக் கடந்து இயங்கி வருகின்றது.


ஒப்போர்ச்சுனிட்டி தரையுளவியுடன் விண்ணுக்கு ஏவப்பட்ட மற்றுமொரு செவ்வாய்த் தரையுளவி ஸ்பிரிட் 2011 ஆம் ஆண்டில் செயலிழந்து போனது. செவ்வாயில் தற்போது வெற்றிகரமாக ஆய்வில் இறங்கியுள்ள நாசாவின் புதிய கியூரியோசிட்டி தரையுளவி அது தரையிறங்கிய இடத்தில் களிமண்களை அடையாளம் கண்டுள்ளது.


மூலம்

[தொகு]