பாலத்தீனத்தின் இரு முக்கிய கட்சிகளிடையே நல்லிணக்க உடன்பாடு எட்டப்பட்டது

விக்கிசெய்தி இல் இருந்து
Jump to navigation Jump to search

வியாழன், ஏப்ரல் 24, 2014

பாலஸ்தீனத்தின் இரண்டு முக்கிய போட்டிக் குழுக்களான ஹமாஸ், மற்றும் ஃபத்தா ஆகியவற்றிற்கிடையே இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளை அடுத்து இன்னும் சில வாரங்களில் ஒருமைப்பாட்டு அரசு ஒன்றை இரண்டும் இணைந்து அமைக்கவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


இரு குழுக்களும் 2007 ஆம் ஆண்டில் பிரிந்தன. இதற்கு முன்னர் அறிவிக்கப்பட்ட உடன்பாடுகள் எதுவும் நடைமுறைப்படுத்தப்படவில்லை. ஃபத்தா அமைப்பின் தலைவர் மகுமுது அப்பாசிற்கும் இசுரேலுக்கும் இடையே இடம்பெற்ற பேச்சுவார்த்தைகள் முறிவடைந்ததை அடுத்தே புதிய உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.


இவ்வறிவிப்பை அடுத்து, புதன்கிழமை இடம்பெறவிருந்த பேச்சுக்களில் தாம் கலந்து கொள்ளப்போவதில்லை என இசுரேல் அறிவித்துள்ளது.


ஹமாஸ் ஒரு பயங்கரவாத அமைப்பாக இசுரேல், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியன கருதுகின்றன. ஹமாசுடனான ஃபத்தா அமைப்பின் புதிய உடன்பாடு எட்டப்பட்டமைக்கு அமெரிக்கா வருத்தம் தெரிவித்துள்ளது. இது இசுரேலுடனான அமைதிப் பேச்சுக்களுக்கு முட்டுக்கட்டையாக இருக்கும் என அமெரிக்க அரசு மாளிகையின் பேச்சாளர் குறிப்பிட்டார்.


இன்னும் ஐந்து வாரங்களில் அப்பாஸ் தலைமையில் ஒரு புதிய ஒருமைப்பாட்டு அரசு உருவாகும் என இரு குழுக்களும் அறிவித்துள்ளன. அடுத்த ஆறு மாதங்களில் நாடாளுமன்றத் தேர்தல்கள் நடத்தப்படும்.


புதிய உடன்பாட்டை காசா மக்கள் வீதிகளில் இறங்கி மகிழ்ச்சி ஆரவாரம் செய்து வரவேற்றனர். வரலாற்று ரீதியாக ஃபாத்தா அமைப்பு பாலத்தீன தேசிய இயக்கத்தில் பலம் வாய்ந்ததாக இருப்பினும், 2006 சனவரியில் நடைபெற்ற தேர்தல்களில் அது ஹமாசிடம் தோற்றது.


நேற்றைய உடன்பாடு அறிவிக்கப்பட்டதை அடுத்து, வடக்கு காசாவில் இசுரேலிய விமானங்கள் தாக்குதல் நடத்தியதில் ஐந்து பொதுமக்கள் கொல்லப்பட்டனர். தாக்குதலுக்குத் தயாராகவிருந்த போராளிகள் மீதே தாம் தாக்குதல் நடத்தியதாக இசுரேல் கூறியுள்ளது.


மூலம்[தொகு]