மேற்குக் கரை அதிகாரபூர்வ ஆவணங்களில் 'பாலத்தீன நாடு' எனப் பயன்படுத்துமாறு அப்பாஸ் உத்தரவு

விக்கிசெய்தி இலிருந்து

திங்கள், சனவரி 7, 2013

அதிகாரபூர்வ பொது ஆவணங்களில் "பாலத்தீன நாடு" என்பதைப் பயன்படுத்தத் தயாராகுமாறு மேற்குக் கரை அரசு அலுவலர்களுக்கு பாலத்தீன அரசுத்தலைவர் மகுமுது அப்பாஸ் நேற்று உத்தரவிட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


இதுவரை காலமும் கடவுச்சீட்டுகள், அடையாள அட்டைகள், சாரதி அனுமதிப் பத்திரங்கள் மற்றும் ஆவணங்களில் "பாலத்தீன அதிகாரசபை" என்றே பொறிக்கப்பட்டு வருகிறது.


பொது ஆவாணங்களில் இவ்வாறான மாற்றம் பாலத்தீன நாடு "தனது சொந்த அமைப்புகளை அமைக்கவும், தமது நாட்டுக்கான அரசுரிமையை அங்கீகரிக்கவும்" உதவும் என அப்பாஸ் குறிப்பிட்டுள்ளார்.


வெளியுறவு அமைச்சு, மற்றும் வெளிநாடுகளில் உள்ள பாலத்தீனத் தூதரகங்கள் இனிமேல் பாலத்தீன நாடு என்பதைப் பயன்படுத்த வேண்டுமென சென்ற வாரம் அப்பாஸ் உத்தரவிட்டிருந்தார்.


இந்தத் திடீர் அறிவிப்புக் குறித்து இசுரேல் இதுவரை கருத்துகள் எதையும் தெரிவிக்கவில்லை.


கடந்த நவம்பர் மாதத்தில் பாலத்தீனம் ஐக்கிய நாடுகளில் உறுப்பினரற்ற பார்வையாளர் அந்தஸ்தைப் பெற்றுக் கொண்டது. இந்த மாற்றத்தை இசுரேலும், அமெரிக்காவும் எதிர்ப்பதாக அறிவித்திருந்தன.


மூலம்[தொகு]