பாலியல் குற்றச்சாட்டு தொடர்பாக பன்னாட்டு நாணய நிதியத் தலைவருக்கு பிணை மறுப்பு

விக்கிசெய்தி இலிருந்து

செவ்வாய், மே 17, 2011

பாலியல் குற்றச்சாட்டு தொடர்பாக பன்னாட்டு நாணய நிதியத்தின் தலைவர் டொமினிக் ஸ்ட்ராஸ்-கான் நியூயார்க்கின் ரைக்கர்ஸ் தீவு சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார்.


பன்னாட்டு நாணய நிதியத் தலைவர் டொமினிக் ஸ்ட்ராஸ்-கான்

62 வயதான ஸ்ட்ராஸ்-கான் சமர்ப்பித்திருந்த 1 மில்லியன் டாலர் பிணை மனுவை நிராகரித்த நீதிபதி, ஸ்ட்ராஸ்-கான் வெளிநாட்டுக்குத் தப்பி ஓடலாம் என்ற காரணத்தினாலேயே பிணை மறுத்ததாகத் தெரிவித்தார். நியூயார்க்கில் உள்ள விடுதி ஒன்றின் பணிப்பெண்ணை பாலியல் வன்முறைக்குட்படுத்தினார் என்ற குற்றச்சாட்டில் கடந்த சனிக்கிழமை நாட்டில் இருந்து விமானம் ஒன்றில் பிரான்சிற்கு வெளியேற முற்பட்ட வேளையில் ஸ்ட்ராஸ்-கான் விமானத்தில் வைத்து அமெரிக்கக் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.


இவர் மீது ஏழு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. இவை நிரூபிக்கப்படும் பட்சத்தில் இவருக்கு 25 ஆண்டு கால சிறைத்தண்டனை வழங்கப்படலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது. அவர் 11 x13 அளவுடைய சிறைக்கூண்டொன்றில் அடைக்கப்பட்டுள்ளார். தன் மீதான குற்றச்சாட்டுகளை இவர் மறுத்துள்ளார்.


பன்னாட்டு நாணய நிதியத்தின் தலைவரான இவர் பிரான்சின் சோஷலிசக் கட்சி சார்பில் 2012 அரசுத்தேர்தல் தலைவர் பதவிக்குப் போட்டிட இருந்தவர். பிரான்சின் அடுத்த அதிபர் தேர்தல் குறித்த கருத்துக் கணிப்புகளிலெல்லாம் ஸ்டிராஸ் கானுக்கு அதிக ஆதரவு இருப்பது தெரியவந்தது. பிரான்சின் அரசுத்தலைவர் நிக்கோலா சர்க்கோசியை வெல்லும் வாய்ப்பு உடைய ஒருவராக இவர் பார்க்கப்பட்டு வந்தார். கடந்த ஞாயிறன்று இவர் செருமனியின் ஜெர்மனியின் தலைவி அங்கிலா மெர்க்கெலைச் சந்திப்பதற்கு ஏற்பாடாகியிருந்தது.


இதற்கிடையில், டிரிஸ்தன் பனோன் என்ற பிரெஞ்சுப் பெண் எழுத்தாளர் ஒருவர் ஸ்ட்ரோஸ்-கான் மீது மேலுமொரு பாலியல் குற்றச்சாட்டைத் தெரிவித்துள்ளார். ஒன்பது ஆண்டுகளுக்கு முன் தன்னிடம் ஸ்டிராஸ்-கான் மோசமாக நடந்து கொண்டிருந்தார் என்று அவர் தெரிவித்துள்ளார். தற்சமயம் நியூயார்க்கில் நடந்ததாக குற்றம்சாட்டப்படும் சம்பவத்திற்குப் பின்னர், திரிஸ்தன் பனோனும் ஸ்டிராஸ்கனுக்கு எதிராக வழக்கு தொடர்வது பற்றி பரிசீலித்து வருகிறார் என்றும் தெரிவிக்கப்படுகிறது.


மூலம்