உள்ளடக்கத்துக்குச் செல்

பிரபாகரனின் தாயார் பார்வதியம்மா காலமானார்

Checked
விக்கிசெய்தி இலிருந்து

ஞாயிறு, பெப்பிரவரி 20, 2011

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் தாயார் பார்வதியம்மா தனது 81வது அகவையில் இன்று காலை 6:10 மணியளவில் யாழ்ப்பாணம், வல்வெட்டித்துறை பிரதேச மருத்துவமனையில் காலமானதாக மருத்துவமனை வட்டாரங்கள் அறிவித்துள்ளன.


பார்வதியம்மாளை வல்வெட்டித்துறை மருத்துவமனையில் சிகிச்சை அளித்துவந்த மருத்துவரான மயிலேறும் பெருமாள் ஆத்திரேலியாவின் இன்பத் தமிழ் ஒலி செய்தியாளருக்கு இது குறித்துத் தெரிவிக்கையில், பார்வதியம்மா கடந்த ஒரு மாதமாகப் படுக்கையில் இருப்பதாகவும், நீராகாரங்கள் குழாய் மூலம் செலுத்தப்பட்டு வந்ததாகவும் தெரிவித்தார். அவருக்குத் தனது பிள்ளைகள் தொடர்பான யோசனை அதிகமாகக் காணப்பட்டதாக அவர் குறிப்பிட்டார். அவரது இறுதிக் கிரியைகள் செவ்வாய்க்கிழமை ஊறணி மயானத்தில் இடம்பெறும் என அவர் கூறினார்.


பார்வதி அம்மாளின் கணவர் திருவேங்கடம் வேலுப்பிள்ளை சென்ற ஆண்டு காலமான நாள் தொடக்கம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கமே அவரைப் பராமரித்து வருகின்றார்.


பார்வதி அம்மாள் 2010 ஏப்ரல் 16 ஆம் நாள் மலேசியாவில் இருந்து மருத்துவ சிகிச்சைக்காக சென்னை வந்தபோது, இந்திய அதிகாரிகளால் அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் மீண்டும் அதே விமானத்திலேயே மலேசியாவுக்குத் திருப்பியனுப்பப்பட்டார். பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டிருந்த அவருக்கு மலேசிய அரசு மனிதாபிமான அடிப்படையில் அங்கு தங்கியிருக்க ஒரு மாத விசா வழங்கியிருந்தது. அதன் பின்னர் அவர் யாழ்ப்பாணம் வந்து வல்வெட்டித்துறை மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்தார்.


பிரபாகரனின் தந்தையார் திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்கள் இராணுவக் காவலில் இருக்கும் போது 2010 சனவரியில் காலமானார். 2009 மே மாதம் நடைபெற்ற இறுதிக் கட்ட மோதல்களின் போது மோதல் வலயத்திலிருந்து இராணுவத்தினரிடம் சரணடைந்த வேளை வேலுப்பிள்ளை மற்றும் அவரது மனைவி பார்வதியம்மா ஆகியோர் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்தனர். இதனையடுத்து மேலதிக விசாரணகளுக்காக இவர்கள் கொழும்புக்குக் கொண்டுவரப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


தொடர்புள்ள செய்திகள்

[தொகு]

மூலம்

[தொகு]