உள்ளடக்கத்துக்குச் செல்

புதுதில்லி பொதுநலவாய விளையாட்டுக்களில் முன்னணி வீரர்கள் பங்குபற்றப்போவதில்லை என அறிவிப்பு

விக்கிசெய்தி இலிருந்து

வியாழன், செப்டெம்பர் 23, 2010

இந்தியத் தலைநகர் புதுடில்லியில் அடுத்த மாதம் 3 ஆம் நாள் தொடங்கவுள்ள பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகள் தொடர்பான சர்ச்சைகள் தொடர்ந்து கொண்டிருக்கின்ற நிலையில் பல முன்னணி வீரர்கள் பங்கேற்க இயலாது என்று அறிவித்துள்ளனர்.


உலகின் மிக வேகமான ஆண் மற்றும் பெண் என்று அறியப்படும் யமைக்காவின் உசைன் போல்ட், மற்றும் செல்லி ஆன் ஃபிரேசர், 800 மீட்டர் ஓட்டத்தில் உலக சாதனை படைத்துள்ள கென்யாவின் டேவிட் ருடீஷா இந்தப் போட்டிகளுக்கு செல்வதில்லை என்று அறிவித்துள்ளனர். தற்போது பிரித்தானியாவின் மூன்று முன்னணி வீரர்களும் பல்வேறு காரணங்களை மேற்கோள் காட்டி தாங்கள் புதுடில்லி செல்லவில்லை என்று அறிவித்துள்ளனர்.


தமது விளையாட்டு வீரர்களை தில்லிக்கு அனுப்புவதை நியூசிலாந்து அரசு தாமதமாக்கியுள்ளதாக அறிவித்துள்ளது. ஏற்கனவே இவ்வாறான முடிவை கனடா, மற்றும் ஸ்கொட்லாந்து ஆகிய நாடுகள் ஏற்கனவே அறிவித்திருந்தன.


இந்தப் போட்டிக்கான முழுமையான ஏற்பாடுகள் இன்னமும் முடியவில்லை. கட்டி முடிக்கப்பட்ட விளையாட்டு அரங்கங்கள் மற்றும் குடியிருப்புகள் குறித்த அதிருப்தி இன்னமும் நிலவி வருகின்றது.


கடந்த செவ்வாய்க்கிழமை, முக்கிய மைதானமான சவகர்லால் நேரு விளையாட்டரங்கத்துக்கு அருகில் கட்டப்பட்டுக் கொண்டிருந்த ஒரு சிறு பாலம் உடைந்து விழுந்தது, கட்டிடங்களின் பாதுகாப்புகள் குறித்த கேள்விகளை எழுப்பியது. 23 தொழிலாளர்கள் இதன் போது காயமடைந்தனர். இவர்களில் 5 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. 10.5 கோடி செலவில் சண்டீகரைச் சேர்ந்த பிஎன்ஆர் இன்பிரா நிறுவனம் அரங்கின் புனரமைப்புப் பணியை மேற்கொண்டு வருகிறது.


நேற்று பளுதூக்கும் போட்டிகள் நடைபெறவுள்ள உள்விளையாட்டு அரங்கில் மேற்கூரைக்கு கீழே பொருத்தப்பட்டுள்ள செயற்கைக் கூரையின் ஒரு பகுதி விழுந்தது இவ்விளையாட்டுப் போட்டிகளைக் கேள்விக்குறியாக்கியுள்ளன.


ஆஸ்திரேலியா தனது வீரர்களுக்கு பாதுகாப்பு தேவை என வேண்டுகோள் விடுத்து இருக்கிறது. இப்போட்டிகளுக்கு தாம் கூடுதலான பாதுகாப்பு அதிகாரிகளை அனுப்பப்போவதாக பிரதமர் ஜூலியா கிலார்ட் இன்று அறிவித்தார். ஆஸ்திரேலியா, மற்றும் இங்கிலாந்து நாடுகள் போட்டியில் பங்குபற்றுவது அந்ததந்த வீரர்களின் விருப்பத்தைப் பொறுத்தது என அறிவித்துள்ளன.


வெளிநாட்டு வீரர்கள் தங்கும் பொதுநலவாயக் கிராமம் தரமாக இல்லை என்று பல மேற்கத்திய நாடுகள் சுட்டிக் காட்டியுள்ளன. ஆனால், இவையெல்லாம் சிறிய பிரச்சினைகள் என்றும் போட்டிகள் தொடங்கும் முன்னர் அனைத்து ஏற்பாடுகளும் சிறப்பான முறையில் முடிக்கப்படும் எனவும் இந்திய அரசும் போட்டி ஏற்பாட்டுக் குழுவினரும் கூறுகிறார்கள்.


இதற்கிடையில், பொதுநலவாயப் போட்டிகள் அமைப்பின் தலைவரான மைக் ஃபென்னல் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கை நேரடியாக சந்தித்து, போட்டிகள் சிறப்பாக நடக்கும் விதமாக உடனடி நடவடிக்கைகளை எடுக்குமாறு அவர் கோருவதற்காக இன்று வியாழக்கிழமை புதுதில்லி செல்லவுள்ளார்.

மூலம்[தொகு]