புற்றுநோயைக் குணப்படுத்த 'வெடி குண்டு', அறிவியலாளர்கள் முயற்சி

விக்கிசெய்தி இலிருந்து

திங்கள், சூலை 5, 2010


புற்றுநோயை உண்டாக்கும் உயிரணுக்களைக் கண்டுபிடித்து அவற்றை அழிக்கவல்ல "வெடி குண்டு" மருந்தைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் ஆஸ்திரேலிய, மற்றும் இந்திய அறிவியலாளர்கள் ஆராய்ந்து வருகிறார்கள்.


"இவ்வகை மருந்து கீமோதெரப்பி முறை மூலம் குணப்படுத்துவதை விட குறைவான பக்க விளைவுகளையே ஏற்படுத்தும்," என இந்த ஆய்வுக்குத் தலைமை தாங்கும் மெல்பேண் டீக்கின் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் வீ டுவான் தெரிவித்தார். இவ்வாய்வுக் குழுவில் ஆஸ்திரேலிய, இந்திய அறிவியலாளர்கள் பங்கேற்கின்றனர்.


"புற்றுநோய் உயிரணுக்கள் புற்றுநோய்க் குருத்தணுக்களைக் கொண்டிருப்பதனால் அவற்றை அழிப்பது மிகவும் சிரமமானது. இவற்றின் வேர் மற்றும் வித்து உயிரணுக்கள் மருந்துகளுக்கு அதிக எதிர்ப்புத்திறனைக் கொண்டிருக்கின்றன," என பேராசிரியர் டுவான் இன்று திங்கட்கிழமை வெளியிட்ட ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.


"பொதுவாக இப்போதுள்ல மருத்துவமுறை புற்றுநோய்க் கிருமிகளை பொதுவாக அழித்தாலும், அவற்றின் வேர் உயிரணுக்கள் தப்பி விடுகின்றன. இவை பின்னர் புதிய உயிரணுக்களை உற்பத்தி செய்யும் அபாயம் உள்ளது."


"எமது புதிய ஆய்வில் கண்டுபிடிக்கப்படும் வெடி குண்டு உயிரணுக்களுக்கு வெளியே இல்லாமல், உள்ளேயே மருந்தை உட்செலுத்தும். இதன் மூலம், அவற்றின் வேர் அணுக்கள் முற்றாக அழிக்கப்படும்."


ஆர்.என்.ஏ. இடையூறு (RNA interference) எனப்படும் தொழில்நுட்பமே இங்கு பயன்படுத்தப்படவிருக்கிறது. இதன் மூலம் உயிரணுக்களின் உள்ளேயே மரபணுக்களைக் கட்டுப்படுத்த ஏதுவாகவிருக்கும்.


இந்தத் திட்டத்தில் பெங்களூரில் உள்ள இந்திய அறிவியல் கழகம், பார்வொன் ஹெல்த் ஆண்ட்ரூ லவ் புற்றுநோய் அறிவியல் மையம் ஆகியவை பங்குபற்றுகின்றன. இத்திட்டத்திற்காக ஆஸ்திரேலிய, மற்றும் இந்திய அரசுகள் $400,000 ஆஸ்திரேலிய டாலர்களை அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு ஒதுக்கியுள்ளன.

மூலம்[தொகு]