உள்ளடக்கத்துக்குச் செல்

பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து சென்னையில் ரயில் மறியல்

விக்கிசெய்தி இலிருந்து

வெள்ளி, செப்டெம்பர் 6, 2013

பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்வைக் கண்டித்து மார்க்சியக் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சென்னை, கிண்டி ரயில் நிலையத்தில் மறியல் நடைபெற்றது. மறியலில் பங்கேற்ற 500க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். பெட்ரோல் விலை கடந்த மூன்று மாதங்களில் 6 முறையும், டீசல் விலை எட்டு மாதங்களில் 8 முறையும் உயர்த்தப்பட்டுள்ளது.

கிண்டி தொடருந்து நிலையத்தில்
கிண்டி தொடருந்து நிலையத்தில்

தற்போது பெட்ரோல் லிட்டருக்கு 3 ரூபாயும், டீசல் 61 பைசாவும், மானியம் இல்லாத சமையல் எரிவாயு 59 ரூபாயும் உயர்த்தப்பட்டுள்ளது. மானியத்துடன் கூடிய சமையல் எரிவாயு விலை 50 ரூபாயும், மண்ணெண்ணை விலை 2 ரூபாயும் உயர்த்தப்பட உள்ளது. இந்த விலை உயர்வை கட்டுப்படுத்துவதற்கு மாறாக, மத்திய அரசு நியாயப்படுத்துகிறது. இந்நிலையில், மத்திய அரசு பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு ஆகியவற்றின் விலையை திரும்ப பெற வேண்டும்; உத்தேசித்துள்ள விலை உயர்வுகளை கைவிட வேண்டும் என வலியுறுத்தி வியாழனன்று (செப்.5) கிண்டி ரயில் நிலையத்தில் மறியல் நடைபெற்றது.


கிண்டி ரயில் நிலைய வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கட்சி ஊழியர்கள் திடீரென்று ரயில்வே பாதைக்கு சென்று மறியல் செய்தனர். இதனால் கடற்கரையிலிருந்து தாம்பரம் மார்க்கமாக சென்ற ரயில் 10 நிமிடம் நிறுத்தப்பட்டது. அதன் பின்னர் மறியலில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது செய்தனர். இப்போராட்டத்திற்கு மாநிலக்குழு உறுப்பினர் க. பீம்ராவ் எம்எல்ஏ தலைமை தாங்கினர்.


மாவட்டச் செயலாளர் ஏ. பாக்கியம், செயற்குழு உறுப்பினர் டி. நந்தகோபால், மாவட்டச் செயலாளர்கள் எஸ். அப்பனு (இந்திய தொழிற்சங்க மையம்), எம். சரஸ்வதி (அனைத்திந்திய சனநாயக மாதர் சங்கம்), எம். தாமோதரன் (இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம்), ப. ஆறுமுகம் (இந்திய மாணவர் சங்கம்), எஸ். பாலசுப்பிரமணியம் (ஆட்டோ சங்கம்) உள்ளிட்டோர் பேசினர்.


மூலம்[தொகு]