உள்ளடக்கத்துக்குச் செல்

பெண்கள் இட ஒதுக்கீட்டு மசோதா இந்திய மாநிலங்களவையில் நிறைவேறியது

விக்கிசெய்தி இலிருந்து

புதன், மார்ச்சு 10, 2010

இந்திய நாடாளுமன்றத்திலும், மாநில சட்டசபைகளிலும் பெண்களுக்கு மூன்றில் ஒரு பங்கு இடங்களை உறுதி செய்யும் மசோதா இந்திய நாடாளுமன்றத்தின் மேலவையாகிய மாநிலங்களவையில் நிறைவேறியுள்ளது.


245 உறுப்பினர்களைக் கொண்ட மேலவையில் 186 உறுப்பினர்களின் ஆதரவுடன் இம்மசோதா நிறைவேறியுள்ளது. ஒருவர் மட்டுமே எதிர்த்து வாக்களித்தார். பல சிறிய கட்சிகள் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாமல் புறக்கணித்தன.


இந்த மசோதா முதன் முதலாக 1996 ஆம் ஆண்டில் முன்வைக்கப்பட்டது. எனினும் இப்போது தான் முக்கிய கட்சிகள் இதற்கு ஆதரவளித்துள்ளன.


நாட்டில் பெண்களின் நிலையை வலுப்படுத்தும் திசையிலான நடவடிக்கைகளில் இந்த நகர்வு ஒரு முக்கிய முன்னேற்றம் இது என்று இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் விபரித்துள்ளார்.


தற்போது கீழவையான லோகசபாவில் பெண்கள் 10 விழுக்காட்டினரே உள்ளனர். சட்டசபைகளில் மிகவும் குறைவானோரே உறுப்பினர்களாயுள்ளனர்.


தற்போது இந்த மசோதா நாடாளுமன்றத்தின் மக்களவைக்குச் செல்கிறது. அங்கு அது இலகுவாக நிறைவேற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


இந்த நகர்வுக்கு எதிராக முறையற்ற விதத்தில் எதிர்ப்புத் தெரிவித்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள் 7 பேர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.


இந்தியாவின் முக்கிய கட்சிகள் இந்தச் மசோதாவுக்கு ஆதரவாக வாக்களித்தன. ஆனால், இது முஸ்லிம் போன்ற சிறுபான்மையினர் மற்றும் சமூகத்தில் பின்தங்கிய குழுக்களின் பிரதிநிதித்துவத்தைப் பாதிக்கும் என்று சில சோசலிசக்கட்சிகள் அஞ்சுகின்றன.

மூலம்

[தொகு]