பெய்ரூட் குண்டுவெடிப்பில் லெபனான் புலனாய்வுத் துறைத் தலைவர் உயிரிழப்பு

விக்கிசெய்தி இல் இருந்து
Jump to navigation Jump to search

சனி, அக்டோபர் 20, 2012

லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற குண்டுவெடிப்பில் அந்நாட்டுன் புலனாய்வுத்துறைத் தலைவர் உட்பட மூவர் கொல்லப்பட்டனர், 80 இற்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.


இக்குண்டுவெடிப்புக்கு சிரியா தலைவர் பசார் அல-அசாடே பொறுப்பு என எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டியுள்ளனர். அரசு உடனடியாகப் பதவி துறக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சாட் அரீரி கேட்டுக் கொண்டுள்ளார். இத்தாக்குதலுக்கு எதிராக பெய்ரூட் எங்கும் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றன.


கிறித்தவர்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட அசுராஃபியா மாவட்டத்திலேயே இத்தாக்குதல் இடம்பெற்றது. இத்தாக்குதலில் புலனாய்வுத்துறைத் தலைவர் வாசிம் அல்-அசன் கொல்லப்பட்டார். இவர் அரீரியின் நெருங்கிய சகா எனக் கூறப்படுகிறது. அரீரி சிரியாவுக்கு எதிராகக் குரல் கொடுத்து வந்தவர்.


அரீரியின் தந்தையும் முன்னாள் பிரதமருமான ராஃபிக் அரீரி 2005 ஆம் ஆண்டில் கொல்லப்பட்டமையில் சிரியாவின் பங்கு பற்றி வாசிம் அல்-அசன் அண்மையில் புலனாய்வில் ஈடுபட்டு வந்தார். அத்துடன் லெபனானில் சிரிய ஆதரவுடன் குண்டுவெடிப்புகளை நடத்தத் திட்டமிட்டதாகக் குற்றம் சாட்டி முன்னாள் அமைச்சர் ஒருவரை இவர் கைது செய்திருந்தார்.


லெபனானின் மதக் குழுக்களில் ஒரு பிரிவினர், குறிப்பாக சியா முசுலிம்கள் சிரிய அதிபர் அல்-அசாட்டின் ஆதரவாளர்கள். ஏனையோர், குறிப்பாக சுணி இசுலாமியர்கள், சிரியாவில் தாக்குதலை நடத்திவரும் கிளர்ச்சியாளர்களை ஆதரித்து வருகின்றனர்.


மூலம்[தொகு]

Bookmark-new.svg