லெபனானில் இசுலாமியப் போராளிகளின் தாக்குதலில் 16 படையினர் கொல்லப்பட்டனர்

விக்கிசெய்தி இலிருந்து

திங்கள், சூன் 24, 2013

சிடோன் துறைமுக நகரில் சுன்னி இசுலாமியப் போராளிகளுடன் இடம்பெற்ற மோதல் ஒன்றில் குறைந்தது 16 லெபனானியப் படையினர் கொல்லப்பட்டனர்.


நேற்று ஞாயிற்றுக்கிழமை சோதனைச் சாவடி ஒன்றின் மீது சுன்னி இசுலாமிய மதகுரு சேக் அகமது அல்-அசீர் என்பவரின் ஆதரவாளர்கள் துப்பாக்கிப் பிரயோகம் செய்ததை அடுத்து இரு தரப்பினருக்கும் இடையில் சண்டை மூண்டது. முன்னராக மதகுருவின் ஆதரவாளர் ஒருவர் இச்சோதனைச் சாவடியில் வைத்துக் கைது செய்யப்பட்டார். இவர் தனது வாகனத்தில் சட்டவிரோதமாக ஆயுதங்கள் வைத்திருந்தமைக்காகக் கைது செய்யப்பட்டிருந்தார். இதனை அடுத்தே சண்டை மூண்டது. நேற்றிரவு முழுவதும் மோதல் தொடர்ந்ததாக உள்ளூர் செய்திகள் தெரிவிக்கின்றன. நூற்றுக்கும் அதிகமான படையினர் காயமடைந்தனர்.


சிரியாவில் இடம்பெற்று வரும் உள்நாட்டுப் போரில் சிரிய அரசுக்கு லெபனானின் சியா இயக்க எஸ்புல்லா அமைப்பினர் ஆதரவளிப்பதை அடுத்தே நாட்டில் மத வன்முறை அண்மைக்காலத்தில் மீண்டும் தலைதூக்கியுள்ளது.


லெபனானில் இம்மாதம் நடைபெறவிருந்த தேர்தல்கள் சிரியப் பிரச்சினையை அடுத்து பின் போடப்பட்டுள்ளன.


மூலம்[தொகு]