பெரியார் பல்கலைக்கழகத்தில் உயிர் கனிம வேதியியலின் முதல் பன்னாட்டு மாநாடு

விக்கிசெய்தி இலிருந்து

செவ்வாய், பெப்பிரவரி 19, 2013

தமிழ்நாடு, சேலம் பெரியார் பல்கலைக்கழக வேதியியல் துறை நடத்தும் முதல் பன்னாட்டு உயிர்கனிம வேதியியல் மாநாடு 2013 பிப்ரவரி 20 – 22 ஆகிய நாட்களில் சேலம் பார்க் பிளாசா ஓட்டலில் நடைபெறவுள்ளது. அம்மாநாட்டின் தொடக்கவிழா பெப்ரவரி 20 காலை 9 மணி அளவில் நடைபெறவுள்ளது. இப்பன்னாட்டு மாநாட்டில் 400 இற்கும் மேற்பட்ட பன்னாட்டு, தேசிய, மாநில அளவிலான ஆய்வாளர்கள் பங்கேற்று ஆய்வுக் கட்டுரைகளை வாசிக்கவுள்ளனர்.


இந்திய அரசின் உயர் ஆய்வு நிறுவனங்களான UGC, DST, INSA, CSIR, DRDO, BRNS, TNSCST மற்றும் பெரியார் பல்கலைக்கழகம் ஆகியவற்றின் நிதி உதவியுடன் நடத்தப்படும் இம்மூன்று நாள் பன்னாட்டுக் கருத்தரங்கில் 15 சிறப்பு சொற்பொழிவுகள், 6 தொடக்க உரைகள், 67 ஆய்வுக் கட்டுரைகள் நேரடியாகவும் எஞ்சிய 290 ஆய்வுக்கட்டுரைகள் சுவரொட்டி வாயிலாகவும் சமர்ப்பிக்கப்பட உள்ளன. மொத்தமாக நானூறுக்கும் மேற்பட்ட ஆய்வாளர்கள் மாநாட்டில் பங்கேற்று கட்டுரைகள் வாசிக்க உள்ளனர்.


இக்கருத்தரங்கில் பங்கேற்க வெளிநாட்டு பல்கலைக்கழகப் பேராசிரியர்களான போர்ச்சுகல் கொயிம்பிரா பல்கலைக்கழகப் பேராசிரியர் ரூயிபாஸ்டோ, இத்தாலி, மெசினா பல்கலைக்கழகப் பேராசிரியர் ஜி. நேரி, பல்கேரியா, மருத்துவப் பல்கலைக் கழகப் பேராசிரியர் இரினா கோஸ்டோவா ஆகியோர் பங்கேற்று ஆய்வு நோக்கவுரை நிகழ்த்த உள்ளனர்.


தேசிய அளவில் முன்னனிப் பேராசிரியர்களான குஜராத் பல்கலைக்கழக பேராசிரியர்கள் எம்.என். பட்டேல், கிஸோர் பாய் ஆர். தேஸாய், ஆக்ரா டாக்டர் பி.ஆர்.ஏ. பல்கலைக்கழகப் பேராசிரியர் ஆர்.சி.சர்மா, கர்நாடகா குவம்பு பல்கலைக்கழகப் பேராசிரியர் போஜய்யா நாயக், ஆந்திரா ஸ்ரீ கிருஷ்ணதேவராயா பல்கலைக்கழகப் பேராசிரியர் கே.ஹூசன் ரெட்டி, சஹிபாபாட், சி.சி.எஸ். பல்கலைக்கழகப் பேராசிரியர் ராம். கே. அகர்வால் மற்றும் ரூர்க்கி இந்திய தொழில்நுட்ப நிறுவனப்பேராசிரியர் ஹாசிக் கோஷ் ஆகியோர் பங்கேற்று ஆய்வுக் கண்டுபிடிப்புகளை நெறிப்படுத்தி விவாதங்களை வழிநடத்தவுள்ளனர்.


மாநில அளவில் திருவாரூர் பல்கலைக்கழகப் பேராசிரியர் எம்.பழநிஆண்டவர், மதுரை காமராஜர் பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் இரா.ராமராஜ் மற்றும் ஏ.ராமு, சென்னை பல்கலைக்கழகப் பேராசிரியர் எம்.கந்தசாமி, இந்திய தொழில்நுட்ப நிறுவனப் பேராசிரியர் என். நரசிம்ம மூர்த்தி, சென்னைப் பச்சையப்பா கல்லூரி பேராசிரியர் எஸ். குணசேகரன், காரைக்குடி அழகப்பா பல்கலைக் கழகப் பேராசிரியர்கள் பி.மணிசங்கர், சி.சேகர், திருச்சி தேசிய தொழில்நுட்ப நிறுவனத்திலிருந்து டாக்டர். உமாமகேஸ்வரி மற்றும் VHNSN கல்லூரியிலிருந்து டாக்டர். என்.ராமன் ஆகியோர் மாநாட்டில் பங்கேற்று ஆய்வுக்கட்டுரைகளை சமர்ப்பிப்பதுடன் மாநாட்டு அரங்குகளுக்கு தலைமை ஏற்கவுள்ளனர்.


இம்மாநாட்டில் புற்றுநோய், ஒளி இயங்கியல் சிகிச்சை, பசுமை வேதியியல், உயிர் கனிம வேதியியலின் மருத்துவத் துறைப் பயன்பாடுகள், வளி மண்டலத்தில் பெருகிவரும் கார்பன் டை ஆக்ஸைடு அளவை மாற்றி வேறு வகை பயன்பாடு கொண்ட கரிம மூலக்கூறுகளாக மாற்றும் ஆய்வுகள், ஹைட்ரஜன் பயன்பாடுகளை அதிகரித்தல், உடலிலுள்ள என்சைம், புரோட்டீன் போன்றவற்றின் செயல்பாடுகளைக் கண்டறிதல், பாக்டீரியா மற்றும் பூஞ்சைகளான எதிர் நுண்ணுயிர்களின் செயல்திறனைக் கண்டறிதல், துணித்துறையில் சாயங்களின் பயன்பாடுகள் போன்ற பொருண்மைகளின் கீழ் ஆய்வுக்கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட உள்ளன.


தொடக்க விழாவை பெரியார் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் டாக்டர் கி.முத்துச்செழியன் தலைமையுரையாற்றி தொடக்கி வைக்கிறார். பிரிட்டிஷ் கவுன்சில் இயக்குநர் பால் செல்லர்ஸ் தொடக்கவிழா உரை நிகழ்த்துகிறார். பல்கேரியா மருத்துவப் பல்கலைக்கழகப் பேராசிரியர் இரினா கோஸ்டோவா மாநாட்டு மைய உரை நிகழ்த்துகிறார். மாநாட்டு மலரை போர்ச்சுகல் கொயிம்பிரா பல்கலைக்கழகப் பேராசிரியர் ரூயி பாஸ்டோ வெளியிடுகிறார். இந்திய அரசின் பட்நாகர் விருது பெற்ற மதிப்புறு பேராசிரியர் பி. நடராஜன், இத்தாலி தொழில் மற்றும் வேதியியல் துறைப்பேராசிரியர் ஜி.நேரி உள்ளிட்டோர் மாநாட்டு தொடக்கவிழா நிகழ்வுகளில் பங்கேற்கின்றனர்.


இம்மூன்று நாள் மாநாட்டில் ஒரே நேரத்தில் பல அரங்குகளில் கட்டுரைகள் வாசிக்கப்படவுள்ளன. ஆய்வுக்கட்டுரைகளின் தரம், நேர்த்தி, கண்டு பிடிப்புகளின் தன்மை ஆகியவற்றை ஒவ்வொரு அரங்கிலும் வல்லுநர் குழு மதிப்பிட்டு சிறந்த ஆய்வுக்கட்டுரைகளுக்கான பரிசுகளும்,விருதுகளும் வழங்கப்படவுள்ளன. மாநாட்டின் நிறைவு விழா நிகழ்வுகள் பெப்ரவரி 22 பிற்பகல் 3 மணி அளவில் நடைபெறவுள்ளன. இவ்விழாவில் வாழ்நாள் சாதனையாளர் உள்ளிட்ட பல்வேறு விருதுகள் வழங்கப்படவுள்ளன. பதினைந்து இலட்ச ரூபாய் நிதிச்செலவில் நடைபெறும் இவ் உயிர் கனிம வேதியியலின் முதல் பன்னாட்டு மாநாட்டு நிகழ்வுகளைப் பெரியார் பல்கலைக்கழக ஆட்சிக்குழு உறுப்பினரும், வேதியியல் துறையின் உதவிப்பேராசிரியருமான முனைவர். இரா.இராஜவேல் ஒருங்கிணைத்து நடத்தி வருகிறார்.


மூலம்[தொகு]

  1. INTERNATIONAL CONFERENCE ON BIOLOGICAL INORGANIC CHEMISTRY (ICBIC-2013), 20-22 பெப்ரவரி 2013
  2. தினகரன், 19.02.2013, சேலம் பதிப்பு, தமிழ்நாடு, பக்கம்: 2.
  3. தினமணி, 20.02.2013, தருமபுரி பதிப்பு, தமிழ்நாடு, பக்கம்: 2.