உள்ளடக்கத்துக்குச் செல்

பெரியார் பல்கலைக்கழக மேட்டுர் உறுப்புக்கல்லூரியில் தமிழ் விக்கிப்பீடியா பயிலரங்கம்

Checked
விக்கிசெய்தி இலிருந்து

ஞாயிறு, மார்ச்சு 3, 2013

பெரியார் பல்கலைக்கழக மேட்டுர் உறுப்புக் கல்லூரியின் சார்பில் கடந்த வெள்ளிக்கிழமை மார்ச் 1 முதல் மாசிலாபாளையத்தில் தேசிய நாட்டுநலப்பணித்திட்ட முகாம் நடைபெற்று வருகின்றது. தமிழக அரசின் சார்பில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கப்பட்டுள்ள இன்றைய சூழலில் மாணவர்களுக்கு தமிழ்க்கணினி, தமிழ் விக்கிப்பீடியா விழிப்புணர்வு, பயிற்சி அளிக்கப்படுவதன் தேவையைக் கருத்தில் கொண்டு, பெரியார் பல்கலைக்கழக மேட்டுர் உறுப்புக்கல்லூரியின் முதல்வர் பேராசிரியர் முனைவர் மோ. தமிழ்மாறன் மாசிலாபாளையத்தில் நிகழ்ந்து வரும் தேசிய நாட்டுநலப்பணித்திட்ட முகாமில், இன்று பிற்பகல் 2.00 மணிமுதல் மாலை 6.00 மணி வரை, சமுதாயக்கூடத்தில், 200 மாணவர்கள் பயன்பெறும் வகையில் ‘‘தமிழ் விக்கிப்பீடியா, தமிழ்க்கணினி பயிலரங்கினை’’ ஏற்பாடு செய்துள்ளார்.


பெரியார் பல்கலைக்கழக இதழியல் மற்றும் மக்கள் தொடர்பாடல் துறையைச் சார்ந்த பேராசிரியர் மா. தமிழ்ப்பரிதி, தமிழ் விக்கிப்பீடியா, தமிழ்க்கணினி பயிலரங்கில் மாணவர்களுக்கு சிறப்புரை நிகழ்த்த உள்ளார். இப்பயிலரங்கில், பேராசிரியர். மா. தமிழ்ப்பரிதி பயிலரங்க நோக்கங்களை அறிமுகம் செய்து, தமிழ் விக்கிப்பீடியா அறிமுகம், தமிழ் விக்கிப்பீடியா திட்டங்கள் மற்றும் தமிழ் விக்கிப்பீடியா தொகுத்தல் பணி, தமிழ்க்கணினி அறிமுகம், தமிழ்க்கணினியின் தேவை, தமிழ் இயங்கு தளங்கள், தமிழ் மென்பொருட்கள், தமிழ் எழுத்துரு, தமிழ் ஒருங்குகுறி, தமிழ் ஒருங்குகுறி பயன்கள், தமிழ் வலைப்பூ உருவாக்கம், திறந்தநிலை இயங்குதளங்கள் மற்றும் மென்பொருட்கள், ஒலிக்கோப்பு, ஒளிப்படங்கள், காணொளிகளின் பயன்பாடுகள் மற்றும் அவற்றை விக்கிப்பீடியா திட்டங்களில் இணைக்கும் முறைகள் ஆகிய பொருணமைகளில் சிறப்புரையும் பயிற்சியும் அளிக்க உள்ளார்.


பெரியார் பல்கலைக்கழக மேட்டுர் உறுப்புக்கல்லூரியில், தேசிய நாட்டுநலப்பணித்திட்டத்தில் 4 அலகுகள் செயல்பட்டு வருகின்றன. முனைவர் கணேசன், முனைவர் சந்திரன், திருமதி சத்யா, முனைவர் விஜயராணி ஆகிய பேராசிரியர்கள் இம்முகாமின் ஒருங்கிணைப்பாளர்கள் ஆவார்கள்.